அலோர்ஸ்டார், ஜன. 13- இங்குள்ள பூலாவ் பாயார் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது காணாமல் போனதாக நம்பப்படும் மூன்று மீனவர்களை தேடும் பணி 371.28 சதுர கடல் மைல் அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ள அஸ்ருள் ஹஷிம் ஜைனுள் (வது 47), அவரின் புதல்வரான ஷாரில் அய்மான் அஸ்ருள் ஹிஷாம் (வயது 16 மற்றும் முகமது அல் அமின் சுபியான் (வயது 29) ஆகிய மூவரையும் தேடும் பணி இன்று காலை 7.30 க்கு மீண்டும் தொடங்கியதாக கெடா மற்றும் பெர்லிஸ் மாநில கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் இயக்குநர் லக்மணா பெர்த்தாமா மெரிடைம் ரோம்லி முஸ்தாபா கூறினார்.
மூன்றாவது நாளாகத் தொடரும் இந்த தேடுதல் நடவடிக்கையில் ஏ.பி.எம்.எம். வான் சேவை, கப்பல், போலீஸ் படகு, பொது தற்காப்பு பிரிவின் (ஏபிஎம்.) படகு ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த தேடி மீட்கும் நடவடிக்கை 371.28 சதுர கடல் மைல் அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று அவர் இன்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை பூலாவ் பாயாரிலிருந்து மேற்கே 10.09 கடல் மைல் தொலைவில் மீன் பிடிக்கச் சென்ற அந்த மூவரும் மீண்டும் கரைக்கு திரும்பவில்லை என ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.
காணாமல் போனவர்களின் உறவினர்கள் செய்த புகாரின் அடிப்படையில் கோல மூடா மாவட்ட போலீஸ் தலைமையத்திற்கு புகார் கிடைத்ததைத் தொடர்ந்து தேடி மீட்கும் நடவடிக்கை தீவிரப் படுத்தப்பட்டது.


