சிங்கப்பூர், ஜன. 13- மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட சில்வர் சின்யர் எனும் எண்ணெய்க் கப்பல் சிங்கப்பூர் கடல் பகுதியில் பெட்ரா பிராங்கா அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை மூழ்கியது. அக்கப்பலில் இருந்த எட்டு ஊழியர்கள் இந்தோனிசிய சரக்கு கப்பல் மீட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 3.40 மணியளவில் சில்வர் சின்சியர் கப்பலிடமிருந்து அவரச அழைப்பு வந்ததைத் தொடர்ந்து உடனடி உதவி வழங்குமாறு அந்த இந்தோனேசிய கப்பலுக்கு சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக முகமை உத்தரவிட்டது.
மூழ்கிய அக்கப்பலில் இருந்த அனைத்து ஊழியர்களையும் இந்தோனேசிய கப்பலின் மாலுமி தனது கப்பலுக்கு மாற்றினார். அனைத்துக் கடலோடிகளும் நலமுடன் உள்ள வேளையில் அவர்கள் இந்தோனேசியாவின் பத்து அம்பாட் துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டதாக அந்த முகமை அறிக்கை ஒன்றில் கூறியது.
அந்த சில்வர் சின்சியர் கப்பலில் திடீரென நீர் புகுந்த காரணத்தால் அது கடலில் மூழ்கியதாக க் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட கப்பலில் உள்ள ஊழியர்களை காப்பாற்றுவதற்காக சிங்கை குடியரசு கடற்படையின் கப்பல் மற்றும் சிங்கப்பூர் கடலோர ரோந்து கண்காணிப்பு கப்பல் அங்கு அனுப்பியது.
சிங்கப்பூர் கடல்சார் அமலாக்க முகமை மேற்கொண்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது என்று அது குறிப்பிட்டது.


