புத்ராஜெயா, ஜன. 13- சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) நாடு முழுவதும் உள்ள 37 கணினி வாகன சோதனை மையங்களில் (புஸ்பாகோம்) சிறப்பு அதிரடிச் சோதனையை நடத்தியது. இச்சோதனையின் போது நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றாத வர்த்தக வாகனங்களை 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்தது.
கடந்த மாதம் 31ஆம் தேதி தொடங்கி நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட இந்த புஸ்பாகோம் சிறப்பு சோதனை நடவடிக்கையில் 21 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஜே.பி.ஜே. தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபாட்லி ரம்லி கூறினார்.
போலியான வர்த்தக வாகன லைசென்ஸ், பதிவு செய்யப்படாத வாகனங்களைப் பயன்படுத்தியது, சாலை வரி மற்றும் காப்பறுதி காலாவதியானது, வேறு நிறுவனங்களின் வர்த்தக வாகன லைசென்ஸ்களைப் பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றங்களுக்காக அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் சொன்னார்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் புஸ்பாகோம் சோதனையில் தேறிய ஒரு வாகனமும் அடங்கும். அந்த வாகனத்தின் வெளிப்புற அமைப்பு வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்களுக்கு ஏற்ற வகையில் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய குற்றங்கள் தொடர்ந்து நிகழ்வதைத் தடுப்பதற்காக சாலை போக்குவரத்து சட்டத்தின் 64(1) வது பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட வாகனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இதனைத் தொடர்ந்து வர்த்தக புஸ்பாகோமில் மேற்கொள்ளப்படும் வர்த்தக வாகன சோதனைகளில் ஊழல் நிகழ்வதைத் தடுப்பதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துடன் ஜே.பி.ஜே. அணுக்கமாகச் செயல்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.
இதர அரசு நிறுவனங்களுடன் இணைந்து தொடர்ச்சியான மற்றும் ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கைகளை ஜே.பி.ஜே. எடுத்து வரும் என்றும் அவர் தெரிவித்தார்.


