கோலாலம்பூர், ஜன. 12 - ஏழாண்டு கால இடைவெளிக்குப் பிறகு தேசிய சேவைப் பயிற்சித் திட்டம் (பி.எல்.கே.என்.) 3.0 இன்று தொடங்குகிறது.130 க்கும் மேற்பட்ட தன்னார்வப் பயிற்சியாளர்கள் இங்குள்ள பிரதேச இராணுவத்தின் 515 படைப்பிரிவு முகாமில் இன்று தங்களைப் பதிந்து கொள்கின்றனர்.
உடல் மற்றும் மனவளப் பயிற்சியின் மூலம் மலேசியாவில் உள்ள இளைஞர்களிடையே தேசபக்தி, தேசிய ஒற்றுமை மற்றும் நற்பண்பை வளர்க்கும் முயற்சியாகவும் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ளும் வலிமையை அவர்களுக்கு அளிக்கும் நோக்கிலும் நடத்தப்படும் இப்பயிற்சியில் 18 முதல் 20 வயதுடைய தன்னார்வலர்கள் வரும் பிப்ரவரி 25 வரை 45 நாட்கள் ராணுவப் பயிற்சி பெறுவார்கள்.
தேசிய சேவை பயிற்சி சட்டம் 2003, தேசிய பாதுகாப்புக் கொள்கை, தற்காப்பு வெள்ளை அறிக்கை மற்றும் தொடர்புடைய கொள்கைகளின் அடிப்படையில் இந்தத் திட்டத்தின் மறு-அமலாக்கம் கட்டங் கட்டமாக மேற்கொள்ளப்படுகிறது.
இந்த பரீட்சார்த்த காலத்திற்குப் பிறகு இந்த தேசிய சேவைத் திட்டம் 13 பிரதேச இராணுவ முகாம்கள், 20 பொது பல்கலைக்கழகங்கள், 33 பாலிடெக்னிக்குகள், 27 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் மற்றும் பல பொது திறன்/தொழில்துறை பயிற்சி நிறுவனங்களில் நடத்தப்படும்.
உடல் வளம், தேசபக்தி, குணநலன்கள் மற்றும் சமூக சேவை பயிற்சிகளை உள்ளடக்கிய மூன்று மாத திட்டமான இந்த பி.எல்.கே.என்., கடந்த 2003 டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
85,000 முதல் 95,000 பயிற்சியாளர்கள் பங்கேற்ற இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு சராசரியாக 60 கோடி வெள்ளி செலவானது.
எனினும், செலவின மறுசீரமைப்பு காரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு வருடத்திற்கு நடவடிக்கை நிறுத்தப்பட்டு 2016ஆம் ஆண்டு 20,000 பயிற்சியாளர்களை மட்டும் இலக்காகக் கொண்டு பி.கே.எல் என். 2.0 மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், வருடத்திற்கு சுமார் 2018 ஆகஸ்டு மாதம் இத்திட்டம் முற்றாக அகற்றப்பட்டது.


