ANTARABANGSA

விபத்துக்குள்ளான தென் கொரிய விமானத்தின் கருப்பு பெட்டி கடைசி நான்கு நிமிடங்கள் செயல்படவில்லை

12 ஜனவரி 2025, 4:23 AM
விபத்துக்குள்ளான தென் கொரிய விமானத்தின் கருப்பு பெட்டி கடைசி நான்கு நிமிடங்கள் செயல்படவில்லை

சியோல், ஜன. 12- தென் கொரியாவின் தென் மேற்கிலுள்ள விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி விபத்து நிகழ்வதற்கு முன் கடைசி நான்கு நிமிடங்கள் செயல்படவில்லை என்று அந்நாட்டு போக்குவரத்து அமைச்சை மேற்கோள் காட்டி ஷின்ஹூவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த விமானத்திலிருந்த பயணத் தரவு பதிவு (எப்.டி.ஆர்.) மற்றும் விமானி அறை குரல் பதவி (சி.வி.ஆர்.) ஆகிய இரண்டும் விமானம் காங்க்ரிட் சுவரில் மோதி விபத்துக்குள்ளாவதற்கு நான்கு நிமிடங்களுக்கு முன்பிருந்து செயல்படவில்லை என்பது கருப்புப் பெட்டி மீது அமெரிக்க தேசிய போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஆணையம் மேற்கொண்ட சோதனையில் தெரிய வந்ததாக நிலம், அடிப்படை வசதிகள் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சு கூறியது.

அந்த சாதனம் தரவுகளைச் சேமிக்கத் தவறியதற்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் அமைச்சின் விமான மற்றும் ரயில் விபத்து மீதான விசாரணை செயல்குழு ஈடுபட்டுள்ளது.

கடந்தாண்டு டிசம்ப்ர் 29ஆம் தேதி தாய்லாந்தின் பேங்காக்கிலிருந்து 181 பேருடன் தென் கொரியாவின் முவான் விமான நிலையம் வந்த ஜெஜு ஏர் விமானம், தரையிறங்கும் கியர் அதாவது சக்கரங்கள் செயல்படாத நிலையில் ஓடுபாதையின் தரையை உரசியபடி தரையிறங்கியது. 

எனினும், அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் காங்க்ரிட் சுவரை மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு விமானப் பணியாளர்கள் தவிர இதர அனைவரும் உயிரிழந்தனர்.

அந்த விமானம் பறவைகளை மோதியது குறித்து விபத்து நிகழ்வதற்கு ஆறு நிமிடங்களுக்கு முன்னர் விமான நிலையக் கட்டுப்பாட்டுக் கோபுரம் அந்த விமானிக்கு எச்சரிக்கையை அனுப்பியது.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.