ஈப்போ, ஜன. 12- இணையம் வழி வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரத்தால் ஈர்க்கப்பட்ட பொறியாளர் ஒருவர் 444,967 வெள்ளியை மோசடிக் கும்பலிடம் பறிகொடுத்தார்.
உள்நாட்டவரான 42 வயதுடைய அந்த ஆடவர் இணையம் வழி வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரத்தை கடந்தாண்டு நவம்பர் 21ஆம் தேதி பேஸ்புக்கில் கண்டதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டிசிபி ஜூல்காஃபி சரியாட் கூறினார்.
அந்த பதிவில் காணப்பட்ட அதிகப்படியான கமிஷன் தொகை தொடர்பான தகவல் பெரிதும் கவர்ந்ததைத் தொடர்ந்து அந்த பொறியாளர் சந்தேக நபர் ஒருவரை வாட்ஸ்ஆப் மூலம் தொடர்பு கொண்டுள்ளார் என அவர் சொன்னார்.
பொருள்களுக்கான கட்டணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும் என்றும் பின்னர் அந்த பணம் பொருள்களுக்கான விலையிலிருந்து 4 முதல் 10 விழுக்காடு கமிஷன் தொகையுடன் திருப்பித் தரப்படும் என்று அந்த சந்தேகப் பேர்வழி வாக்குறுதியளித்துள்ளார்.
அந்த சந்தேக நபர் கூறியபடி பத்து வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் 444,967 வெள்ளியை பாதிக்கப்பட்ட நபர் செலுத்தியுள்ளார். எனினும், வாக்குறுதியளிக்கப்பட்டபடி கமிஷன் தொகை கிடைக்காததைத் தொடர்ந்து தாம் ஏமாற்றப்பட்டதை அவ்வாடவர் உணர்ந்துள்ளார் என ஜூல்காஃபி அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த மோசடி தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் கடந்த வெள்ளிக்கிழமை ஈப்போவில் புகார் செய்ததாக அவர் கூறினார்.
பல்வேறு ரூபங்களில் வெளியிடப்பட்டும் மோசடி விளம்பரங்களை எளிதில் நம்பிவிட வேண்டாம் என பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


