புத்ராஜெயா, ஜன.10 - வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படும் தெலுக் பங்ளிமா காராங்கில் உள்ள ஐந்து ஹெக்டேர் விவசாயப் பண்ணை மீது குடிநுழைவுத் துறை அதிரடிச் சோதனையை நடத்தியது.
இம்மாதம் 9ஆம் தேதியுடன் காலாவதியாகிவிட்ட கட்டுமானத் துறைக்கான தற்காலிக வேலை அனுமதிச் சீட்டைப் பயன்படுத்தி வெளிநாட்டுப் பிரஜைகள் ஜாலான் ஹாலியா மூடா, கம்போங் ஜோஹான் செத்தியா ஆகிய இடங்களில் காய்கறித் தோட்டங்களை நடத்தி வந்ததாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜக்காரியா ஷபான் தெரிவித்தார்.
கடந்த வாரத்தில் பெறப்பட்ட புகார்கள் மற்றும் உளவுத்துறையின் அடிப்படையில், வெளிநாட்டினர் மற்றும் உள்நாட்டினர் உட்பட 70 பேரை சோதனை செய்வதற்கு பல்வேறு பதவிகளை வகிக்கும் 69 பேர் கொண்ட அமலாக்கக் குழு அப்பகுதிக்கு அனுப்பப்பட்டது என்று அவர் இன்று அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.
அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 42 வங்காளதேச ஆடவர்கள், 13 மியன்மார் பிரஜைகள், ஒரு மியன்மார் பெண், நான்கு இந்தோனேசிய ஆடவர்கள், இரண்டு இந்தோனேசிய பெண்கள், இரண்டு பாகிஸ்தானிய ஆடவர்கள் மற்றும் ஒரு இந்தியர் உட்பட 65 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர் என அவர் தெரிவித்தார்.
18 முதல் 60 வயதிற்குட்பட்ட அவர்கள் அனைவரும் விசாரணை மற்றும் மேல் நடவடிக்கைகளுக்காக புக்கிட் ஜாலில் குடிநுழைவுத் துறை தடுப்புக் காவல் முகாமிற்கு கொண்டுச் செல்லப்பட்டனர் என்று ஜக்காரியா கூறினார்.
காலை 11.30 மணிக்கு தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கையில் சிறப்பு அதிரடிப் பிரிவு, அமலாக்கப் பிரிவு, குடிநுழைவுத் தலைமையகத்தின் புலனாய்வு மற்றும் சிறப்பு நடவடிக்கைப் பிரிவு ஆகியவை பங்கு கொண்டன.


