கோலாலம்பூர், ஜன. 10 - கோம்பாக், ஜாலான் புக்கிட் லகோங்கில் உள்ள சட்டவிரோதக் குப்பைக் கொட்டுமிடத்தில் ஏற்பட்டத் தீயை அணைக்கும் நடவடிக்கை கடந்த ஜனவரி 2 ஆம் தேதி முதல் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வீட்டு மற்றும் கட்டுமானக் கழிவுப் பொருட்களால் ஏற்பட்ட தீ 464 சதுர மீட்டர் பரப்பளவை உள்ளடக்கியுள்ள வேளையில் இன்றைய நிலவரப்படி 55 விழுக்காடு தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில பேரிடர் மேலாண்மைப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்கின்றன. மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நேரடி தாக்குதல் முறையைப் பயன்படுத்தி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அருகிலுள்ள நீரோடைகளிலுள்ள நீர் ஆதாரங்கள் தீயை அணைக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
தீயை அணைக்கும் பணிகளை விரைவுபடுத்துவதற்காக இரண்டு மண்வாரி இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் அந்த இடத்தில் தரை மற்றும் வான் கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது என அந்த அறிக்கை கூறியது.
அந்த நிலத்தின் தகுதி நிலை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அது தனியார் நிலம் எனக் கண்டறியப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.


