ஷா ஆலம், ஜன. 10 - எச்.எம்.வி. கிருமித் தொற்றிலிருந்து பாதுகாத்துக்
கொள்வதற்கு ஏதுவாக தடுப்பு நடவடிக்கைளை மேற்கொள்ளும்படி பொது
மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
கைகளை சோப்பினால் அடிக்கடி கழுவுவது, நோயாளிகளிடமிருந்து
விலகியிருப்பது மற்றும் முகக்கவசம் அணிவது போன்ற தடுப்பு
நடவடிக்கைகளை எடுக்கும்படி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள விளக்கப்
படத்தின் மூலம் சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா
ஜமாலுடின் கேட்டுக்கொண்டார்.
நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்பைக்
கொண்டிருப்பது அல்லது கிருமித் தொற்று பரவியுள்ள இடங்களைத்
தொடுவதன் மூலம் இந்நோய் பரவும் சாத்தியம் உள்ளதாக அவர்
சொன்னார்.
எச்.எம்.பி.வி. கிருமித் தொற்றிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்
கொள்ளுங்கள். சுற்றுப்புற தூய்மையைப் பராமரிக்கும் அதேவேளையில்
தடுப்பு நடவடிக்கைகளையும் எடுங்கள். விழிப்புணர்வுதான் தடுப்பு
முயற்சிக்கான முதற்படியாகும் என அவர் தனது பேஸ்புக் பக்கத்தில்
குறிப்பிட்டுள்ளார்.
எச்.எம்.பி.வி. என்பது சுவாசக் குழாயைப் பாதிக்கக் கூடிய ஒரு வகை
கிருமித் தொற்றாகும். சீனாவில் இந்நோய்ப் பரவல் அச்சமூட்டும்
வகையில் உள்ளதோடு சில ஆசிய நாடுகளுக்கும் இந்நோய் பரவியுள்ளது.
கடந்தாண்டு முழுவதும் 327 எச்.எம்.பி.வி கிருமித் தொற்று தொடர்பான
நேர்மறையான சோதனை முடிவுகளை சுகாதார அமைச்சு பெற்றுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு இந்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை 225ஆக
மட்டுமே இருந்த து என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும். இது வழக்கமாக சளிக்காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய சாதாரண
வைரஸ் எனக் கூறிய சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி
அகமது, குளிர் காலத்தில் இந்நோய்ப் பரவல் அதிகம் காணப்படும் என்றார்.


