கோலாலம்பூர், ஜன. 10- கல்வியமைச்சின் பள்ளி தொடக்க உதவித் திட்டம்
(பி.ஏ.பி.) இம்மாதம் ஜனவரி 13ஆம் தேதி தொடங்குகிறது. 2024/2025
பள்ளித் தவணையில் ஒன்றாம் வகுப்பு தொடங்கி நான்காம் படிவம் வரை
பயிலும் மாணவர்களுக்கு தலா 150 வெள்ளி வழங்க இத்திட்டம் வகை
செய்கிறது.
ஆறாம் படிவ இரண்டாம் தவணையில் பயிலும் மாணவர்கள் மற்றும்
2025/2026 பள்ளித் தவணையில் முதலாம் வகுப்பில் சேரும்
மாணவர்களுக்கு 150 வெள்ளியை உள்ளடக்கிய இந்த பி.ஏ.பி. உதவி
இவ்வாண்டு பிப்ரவரி மாதமும் ஆறாம் படிவத்தில் புதிதாக நுழையும்
மாணவர்களுக்கான உதவி நிதி ஜூலை 1ஆம் தேதியும் தொடங்கியும்
வழங்கப்படும் என்று கல்வியமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.
மாணவர்களுக்கு ஒரு முறை மட்டும் தலா 150 வெள்ளி வழங்க வகை
செய்யும் இந்த பி.ஏ.பி. திட்டத்திற்கு மடாணி அரசாங்கம் 79 கோடியே 12
லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்தின்
மூலம் 52 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவர். முதன் முறையாக
இவ்வாண்டு இந்த பி.ஏ.பி. திட்டம் ஆறாம் படிவ மாணவர்களுக்கும்
விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.
இந்த நிதி பள்ளிகள் வாயிலாக ரொக்கமாக வழங்கப்படும். தொடக்கப்
பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர்களிடமும் இடைநிலைப் பள்ளிகளில்
பெற்றோர்கள் அல்லது மாணவர்களிடமும் ஒப்படைக்கப்படும். அந்த
தொகையை வங்கிக் கணக்குகளில் சேர்க்கும் நடவடிக்கை 2025 ஆண்டு
தொடங்கி அமல்படுத்தப்படும்.
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோர்கள் எதிர்நோக்கும்
சிரமங்களைக் குறைக்கும் நோக்கில் மடாணி அரசாங்கம் இந்த பி.ஏ.பி.
உதவி நிதித் திட்டத்தை அமல்படுத்தியுள்ளதாக கல்வியமைச்சு
குறிப்பிட்டது.


