ஷா ஆலம் ஜன. 10 - ஆசியான் தலைவர் பொறுப்பை இவ்வாண்டு
ஏற்கவுள்ள நிலையில் உலக அரங்கில் வலுவான போட்டியாளராக
மலேசியாவை நிலை நிறுத்துவதில் முன்னிலை வகிக்க சிலாங்கூர்
தயாராக உள்ளது.
முதலீட்டாளர்களின் நுழைவை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட
ஸ்பீட் சிலாங்கூர் கொள்கை மற்றும் அதிநவீன தொழில்துறைகள் மீதான
இலக்கு உள்பட மாநில அரசு முன்னெடுத்துள்ள பல்வேறு திட்டங்கள்
வாயிலாக இதனை சாத்தியமாக்க முடியும் என்று மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கி வரும் சிலாங்கூர்
செமிகண்டக்டர் மற்றும் உயர்தொழில்நுட்ப துறைகளில் தொடர்ந்து
முக்கியப் பங்கினை ஆற்றி வரும் என்று அவர் தெரிவித்தார்.
ஸ்பீட் சிலாங்கூர் கொள்கை மற்றும் இண்டகிரேட ட் சர்க்கியூட் (ஐ.சி.)
வடிமைப்பு பூங்கா போன்ற முன்னெடுப்புகள் சிலாங்கூரை முக்கிய
மையமாக நிலை நிறுத்தும். இதன் வாயிலாக அனைத்துலக அரங்கில்
மலேசியா போட்டியிடத்தக்க நாடாக தொடர்ந்து விளங்குவதற்குரிய
வாய்ப்பு ஏற்படும் என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நேற்று நடைபெற்ற 2025 மலேசிய
பொருளாதார ஆய்வரங்கில் கலந்து கொண்டப் பின்னர் அவர் இந்த
பதிவை வெளியிட்டுள்ளார்.
பொருளாதார அமைச்சின் ஏற்பட்டில் நடைபெற்ற மலேசியாவின்
தருணத்தைக் கைப்பற்றுதல் எனும் தலைப்பிலான அந்த ஆய்ரவங்கை
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடக்கி வைத்தார்.
2025 ஆசியான் தலைமைத்துவ பதவிற்கேற்ப மலேசியாவின் எதிர்கால
பொருளாதாரத்தை வடிவமைப்பதில் இந்த ஆய்வரங்கு முக்கியத் தளமாக
விளங்குகிறது.


