புத்ராஜெயா, ஜன. 10 - மலேசியாவுக்கு இரண்டு நாள் அதிகாரப்பூர் வருகை
மேற்கொண்டுள்ள ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபாவுக்கு இங்குள்ள
காம்ப்ளெக்ஸ் பெர்டானா புத்ராவில் அதிகாரப்பூர்வ வரவேற்பு நல்கப்பட்டது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஜப்பானியா பிரதமராகப் பதவியேற்றப் பிறகு
ஷிகெரு இஷிபா மலேசியாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது அதிகாரப்பூர்வ வருகை இதுவாகும்.
இன்று காலை ட9.00 மணியளவில் புத்ரா பெர்டானா வந்தடைந்த ஷிகெரு
இஷிபாவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் வரவேற்றார். பின்னர் இரு நாட்டு
தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன.
மேஜர் அரிஃபுடின் முகமது யூசுப் தலைமையிலான மூன்று அதிகாரிகள் மற்றும் 103 உறுப்பினர்கள் அடங்கிய அரச ரேஞ்சர் பட்டாளத்தின் (சடங்குப்பூர்வ) மரியாதை அணிவகுப்பை அவர் பார்வையிட்டார்.
இந்த நிகழ்வில் துணைப் பிரதமர்களான டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி, வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான், அமைச்சர்கள், வெளிநாட்டு அரசதந்திரிகள் மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அன்வாருடன் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னர் இஷிபா வருகையாளர் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
இக்கூட்டத்தில் மலேசிய-ஜப்பான் இரு தரப்பு உறவுகள் குறிப்பாக வர்த்தகம், முதலீடு, மனித வள மேம்பாடு, எரிசக்தி மீதான ஒத்துழைப்புகளை இரு தலைவர்களும் மறுஆய்வு செய்வர் என விஸ்மா புத்ரா நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.
மேலும் மத்திய கிழக்கு விவகாரம் உள்பட இரு தரப்பு நலன் சார்ந்த வட்டார மற்றும் அனைத்துலக விவகாரங்கள் குறித்தும் அவ்விரு தலைவர்களும் கருத்து பரிமாற்றம் செய்து கொள்வர். இந்நிகழ்வுக்குப் பின்னர் இரு நாட்டு பிரதமர்களும் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்வர்.
ஜப்பானிய பிரதமருக்கு அன்வார் ஸ்ரீ பெர்டானா காம்ப்ளெக்சில் மதிய விருந்து வழங்கி கௌரவிப்பார்.


