கூலாய், ஜன 10 : இந்த வருடம் PLKN எனப்படும் தேசிய சேவைப் பயிற்சியைத் தொடரும் அரசாங்கத்தின் முடிவை, பெற்றோர்கள் உட்பட 87 விழுக்காட்டினர் ஆதரித்துள்ளனர்.
இத்தகவலை தற்காப்பு மற்றும் பாதுகாப்புக்கான மலேசியக் கழகம் (MIDAS) நடத்திய ஆய்வு முடிவுகளை மேற்கோள் காட்டி மக்களவை சபாநாயகர் தான் ஸ்ரீ ஜொஹாரி அப்துல் தெரிவித்தார்.
ஆகவே, இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படும் PLKN 3.0 பயிற்சி, மலேசிய இளைஞர்களிடையே தலைமைப் பண்புகளை உருவாக்க முடியும் என்று அரசாங்கம் நம்புவதாக அவர் சொன்னார்.
இதன் மூலம் நாளையத் தலைவர்களாகும் வாய்ப்பையும் அதற்கு உண்டான ஆற்றலையும் இளைய சமுகத்தினர் மேம்படுத்திக் கொள்ள முடியும் என்றார் அவர்.
இத்திட்டத்தில் 70 விழுக்காடு இராணுவப் பயிற்சியும் 30 விழுக்காடு தேசியப் பற்றும் சொல்லிக் கொடுக்கப்படும்.
எதிர்வரும் ஜனவரி 12 முதல் பிப்ரவரி 25 வரை சோதனை முறையில் இத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. அதில் 52 பெண்கள் உட்பட 200 பேர் தன்னார்வ முறையில் ஈடுபடவுள்ளது குறிப்பிடத்தக்கது .


