காஸா, ஜன. 10 - காஸா பகுதியில் பல குடியிருப்புகள் மீது இஸ்ரேலிய ராணுவம் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று படுகொலைத் தாக்குதல்களை நடத்தியது. இத்தாக்குதல்களின் விளைவாக 70 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு மேலும் 104 பேர் காயமடைந்தனர் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் காஸா பகுதியில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு படைகளின் தாக்குதல் தொடக்கத்திலிருந்து அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 46,006 பேரை எட்டியுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் சிறார்கள் மற்றும் பெண்களாவர். மேலும் 109,378 பேர் இப்போரில் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன செய்தி நிறுவனம் கூறியது.
இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள், மோசமான இடிபாடுகள் மற்றும் எரிபொருள் மற்றும் கனரக உபகரணங்களின் பற்றாக்குறை காரணமாக ஆம்புலன்ஸ்கள் மற்றும் சிவில் பாதுகாப்புப் படைகள் மீட்புப் பணிகளைச் செய்ய போராடுவதால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் இன்னும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளனர்.


