கோலாலம்பூர், ஜன. 10 - முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு
விரைவான மற்றும் ஆக்ககரமான தீர்வுகளை வழங்குவதற்கு மடாணி
அரசாங்கம் எப்போதும் முனைப்பு காட்டி வருகிறது என்று பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மைக்ரோன் டெக்னோலோஜி இன்காப்ரேட்டட் (மைக்ரோன்) நிறுவனத்தின்
தலைவரும் தலைமைச் செயல்முறை அதிகாரியமான டத்தோ சஞ்சய்
மெஹ்ரோத்ராவுடன் நேற்று நடத்தப்பட்ட மரியாதை நிமித்தச் சந்திப்பின்
போது இந்த விவகாரம் முன்வைக்கப்பட்டதாக அவர் தனது பேஸ்புக்
பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாவில் செமிகண்டக்டர் துறையை மேம்படுத்துவதற்கான முக்கியத்
தேவைகள் குறித்து இச்சந்திப்பில் நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக்
கொண்டோம்.
மேலும் உள்நாட்டு மனித வள மேம்பாட்டின் முக்கியத்துவம் மற்றும்
மலேசியாவில் உயர் தொழில்நுட்ப தொழிற்சாலைகளை சீராக
வழிநடத்துவதற்குப் பங்களிக்கும் விஷயங்கள் குறித்தும் இச்சந்திப்பில்
விவாதிக்கப்பட்டது என்றார் அவர்.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மைக்கோரன் நிறுவனம் உலகத்
தகவல் பரிமாற்றத்தில் உருமாற்றம் செய்வதில் புத்தாக்க நினைவாக்கத்
தீர்வுகளை வழங்கும் உலகளாவிய முன்னணி அமைப்பாக விளங்குகிறது.
உலக செமிக்கண்டக்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில்
அனைத்துலக நிலையில் உயரிய இடத்தை உறுதி செய்வதில் மலேசியா
கவனம் செலுத்தி வருகிறது என்று அன்வார் கூறினார்.
இந்நோக்கத்தின் அடிப்படையில் 2030 தேசிய தொழிலியல் பெருந்திட்டம்
மற்றும் தேசிய செமிகண்டக்டர் வியூகம் ஆகியவற்றில் வரையறுக்கப்பட்டுள்ளபடி பல்வேறு பொருளாதாரத் துறைகளில் நாட்டின் ஈர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


