கோலாலம்பூர், ஜன. 10 - பெட்டாலிங் ஜெயாவிலுள்ள ஹோட்டல் ஒன்றில்
இரு ஆடை வடிவமைப்பாளர்களைத் தாக்கி காயப்படுத்திய சந்தேகத்தின்
பேரில் உள்நாட்டு ஆடவர் ஒருவரை போலீசார் விசாரணைக்காக தடுத்து
வைத்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் இரவு 11.00
மணியளவில் இரு புகார்களை தாங்கள் பெற்றதாக பெட்டாலிங் ஜெயா
மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷஹாருள்நிஸாம் ஜாபர் கூறினார்.
புகைப்படக்காரரான 30 வயதுடைய சந்தேகப் பேர்வழி சம்பவம் நிகழ்ந்த
இடத்தில் கைது செய்யப்பட்ட வேளையில் 53 மற்றும் 47 வயதுடைய
பாதிக்கப்பட்ட இருவருக்கும் கன்னத்தில் காயம் ஏற்பட்டது என்று அவர்
அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் ஆயுதமாக பயன்படுத்தப்பட்ட கேமரா ஒன்றும்
பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறிய அவர் அவர்களுக்கிடையிலான
தனிப்பட்ட விவகாரம் இத்தாக்குதலுக்கு காரணம் என அறியப்படுகிறது
என்றார் அவர்.
கைது செய்யப்பட்ட ஆடவர் தண்டனைச் சட்டத்தின் 324வது பிரிவின் கீழ்
விசாரணைக்காக நேற்று தொடங்கி இரு தினங்களுக்கு தடுத்து
வைக்கப்பட்டுள்ளார் என்று அவர் மேலும் சொன்னார்.
நேற்று முன்தினம் இரவு பெட்டாலிங் ஜெயாவிலுள்ள ஹோட்டல்
ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது புகைப்படக்காரர் ஒருவரால் இரு
ஆடை வடிவமைப்பாளர்கள் தாக்கப்பட்டதாக ஊடகங்கள் முன்னதாக
செய்தி வெளியிட்டிருந்தன.


