கோலாலம்பூர், ஜன. 10 - புத்தாண்டை முன்னிட்டு சுபாங் ஜெயா, பண்டார்
சன்வேயில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது
போதைப் பொருளை உட்கொண்ட சந்தேகத்தின் பேரில் மலாயா
பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த
நபர் ஒருவரிடம் காவல் துறையினர் நேற்று முன்தினம் வாக்குமூலம்
பதிவு செய்தனர்.
அந்த மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சிகிச்சை
பெற்று வந்த அந்த ஆடவர் நேற்று முன்தினம் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் கூறினார்.
கடந்த மாதம் 31ஆம் தேதி பண்டார் சன்வேயில் நடைபெற்ற புத்தாண்டு
இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நால்வர் உயிரிழந்தது தொடர்பான
விசாரணைக்காக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நண்பர்கள் உள்பட
ஐம்பது பேரிடம் இதுவரை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர்
பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டு இன்னும் மலாயா பல்கலைக்கழக
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்றொரு நபரிடம்
வாக்குமூலம் பெறுவதற்கான சரியான தருணத்திற்காக காவல்
துறையினர் காத்திருக்கின்றனர் என்று அவர் சொன்னார்.
போதைப் பொருளை உட்கொண்ட காரணத்தால் அந்த இசை நிகழ்ச்சியில்
கலந்து கொண்டவர்களில் இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர்
உயிரிழந்ததாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன்
ஓமார் கான் முன்னதாக கூறியிருந்தார்.
இதனிடையே, அந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேலும் மூவர்
இதே பாதிப்பு காரணமாக பெட்டாலிங் ஜெயா, மலாயா பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டனர்.


