ஷா ஆலம், ஜன. 9 - பிரதமரைப் பற்றிய பொய்ச் செய்தியை கடந்தாண்டு இறுதியில் முகநூலில் வெளியிட்டது தொடர்பில் சுங்கை பூரோங் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜம்ரி முகமது ஜைனுல்டினிடம் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி.) வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
பெரிக்கத்தான் நேஷனல் பிரதிநிதியான முகமது ஜம்ரியிடம் ஜனவரி 7 ஆம் தேதி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக எம்.சி.எம்.சி கூறியது.
முகமது ஜம்ரியின் முகநூல் கணக்கில் பொய்யானச் செய்தி பதிவேற்றப்பட்டது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறை விசாரணைக்கு உதவுவதற்காக அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
உஸ்தாஸ் ஜம்ரி மாண்டோப் என அழைக்கப்படும் டாக்டர் முகமது ஜம்ரி, 1998ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறார். இச்சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 50,000 வெள்ளி அபராதம் அல்லது ஒரு வருடம் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் வழங்கப்படும்.
போலீசாருடன் இணைந்து நடத்திய சோதனையில் ஒரு விவேக கைப்பேசி மற்றும் ஒரு சிம் கார்டு ஆகியவற்றை வழக்கின் ஆதாரப் பொருளாக ஒப்படைக்குமாறு கோரப்பட்டது.
மேலும் விசாரணைக்காக அந்த உபகரணங்கள் மீது தடயவியல் ஆய்வு நடத்தப்படும் என்று ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சமூக ஊடகங்களில் ஏதேனும் தகவல்களைப் பதிவேற்றும்போது கவனமாக இருக்குமாறும், பரப்பப்படும் தகவல்கள் உண்மையானதா என்பதை உறுதிப்படுத்துமாறும் எம்.சி.எம்.சி. பொதுமக்களைக் கேட்டுக் கொண்டது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் வாயிலாக மாட்சிமை தங்கிய பேரரசரை அவமதிக்கும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சமூக ஆர்வலர் இஸ்வர்டி மோர்னிக்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆதரவைப் புலப்படுத்துவது போல் காட்டும் ஒரு போஸ்டரை முகமது ஜம்ரி தனது முகநூலில் பகிர்ந்திருந்தார்.


