சுக்கை, ஜன. 9: விளையாட்டு பொருட்கள் விற்கும் வியாபாரி ஒருவர், 148 போலி ஆயுதங்களை வைத்திருந்ததாக கெமாமன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
குற்றம் சாட்டப்பட்ட, 31 வயதான வான் முஹம்மது ஃபேசில் வான் மன்சோர், பண்டார் பாரு கிஜாலில் உள்ள தனது வணிக வளாகத்தில் ஒன்பது போலி ஆயுதங்களையும், கெர்டேவில் உள்ள அவரது வீட்டில் 139 ஆயுதங்களையும் வைத்திருந்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.
ஆயுதச் சட்டம் 1960 பிரிவு 36ன் கீழ், போலி ஆயுதங்களை வைத்திருந்தல் மற்றும் இறக்குமதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். கடந்த ஜனவரி 5 ஆம் தேதி மதியம் இக்குற்றத்தை செய்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது RM5,000க்கு மேல் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் RM5,000 ஜாமீன் வழங்க துணை அரசு வழக்கறிஞர் லிம் ஜான் யி பரிந்துரைத்தார். இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் நூர் ஃபராஹின் ஷாஸ்லின் முகமட் ரெதுவான் ஷா எட்வின் தனது வாடிக்கையாளரின் நிதி நிலைமை காரணமாக ஜாமீன் தொகையை குறைக்குமாறு கேட்டு கொண்டார்.
மாஜிஸ்திரேட் ஷரிபா அமிர்தா ஷாஷா அமீர் ஷரிபுடின், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் RM3,000 ஜாமீன் வழங்க அனுமதித்தார். ஜனவரி 13ஆம் தேதியை தண்டனை வழங்கும் தேதியாக நிர்ணயித்தார்.
- பெர்னாமா


