கோலாலம்பூர், ஜன. 9 - டாயேஷ் பயங்கரவாதக் கும்பலுடன் தொடர்புடைய பிரசுரங்களை வைத்திருந்தது தொடர்பான இரு குற்றங்களுக்காக முன்னாள் சந்தை அதிகாரி ஒருவருக்கு இங்குள்ள உயர்நீமன்றம் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
தனக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளையும் 47 வயதான சுஹைனி சர்வான் என்ற அப்பெண் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்துநீ திபதி டத்தோ முகமது ஜமீல் ஹுசேன் இத்தண்டனையை வழங்கினார்.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்த நீதிமன்றம், அவர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து (2024 மே 30ஆம் தேதி ) ஏககாலத்தில் தண்டனையை அனுபவிக்க உத்தரவிட்டது
அதே சமயம், வழக்கின் சாட்சிப் பொருள்களை பறிமுதல் செய்து அடுத்த கட்ட நடவடிக்கைக்காக அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.
கடந்த 2024 மே 30ஆம் தேதி பிற்பகல் 2.20 மணியளவில் ஜாலான் பைடூரி, தாமான் டைமான் ஜெயா, கோத்தா திங்கி, ஜோகூர் எனும் முகவரியில் டாயேஷ் பயங்கரவாதக் கும்பல் மற்றும் பயங்கரவாதச் செயல்கள் தொடர்பான கட்டுரைகளை தனது மடிக்கணினியில் வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அதே நாளில் பிற்பகல் 2.20 மணியளவில் ஜோகூர், கோத்தா திங்கியில் உள்ள ஃபெல்டா லோக் ஹெங் பாராட்டில் டாயேஷ் பயங்கரவாதக் கும்பல் மற்றும் பயங்கரவாதச் செயல்கள் தொடர்பான ஐந்து புத்தகங்களை வைத்திருந்ததாக சுஹைனி மீது இரண்டாவது குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.


