ஷா ஆலம், ஜன. 9 - இசை நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பில்
நடப்பிலிருக்கும் சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) மாநில
அரசு தொடர்ந்து கடைபிடிக்கும். அதேவேளையில் உத்தேச சிறுநீர்ச்
சோதனை சந்தேகத்திற்குரிய நபர்களை மட்டுமே உள்ளடக்கியதாக
இருக்கும்.
இவ்விவகாரம் தொடர்பில் இதற்கு முன்னர் தாம் வெளியிட்ட அறிக்கை
சட்டத்தை மீறும் நபர்களை இலக்காகக் கொண்டு வெளியிடப்பட ஒரு
உதாரணமாகும் என்று ஊராட்சி மன்றங்கள் மற்றும் சுற்றுலாத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம் கூறினார்.
சிலாங்கூரில் பொறுப்பான முறையில் ஏற்பாடு செய்யப்படும் இசை
நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு அங்கங்களுக்கு ஆதரவளிக்கும்
மாநில அரசின் கடப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார்.
சுற்றுலாத் துறையை ஊக்குவித்து அதன் மூலம் மாநிலத்தின்
வருமானத்தை உயர்த்துவதற்கு ஏதுவாக பொழுதுபோக்கு சார்ந்த
நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதை வரவேற்பதில் மாநில அரசு முற்போக்கான
மற்றும் உள்ளடங்கிய கொள்கையை நிலை நிறுத்துகிறது.
உதாரணத்திற்கு, சட்டவிரோத வஸ்துகள் அல்லது போதைப் பொருள்
போன்ற தடை செய்யப்பட்ட பொருள்களை யாரேனும் கொண்டு
வருவதைக் கண்டால் அரச மலேசிய போலீஸ் படை உறுப்பினர்களுடன்
இணைந்து நடவடிக்கை எடுப்பதற்குரிய உரிமை அதிகாரிகளுக்கு உள்ளது
என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
பொழுபோக்கு துறையைச் சேர்ந்தவர்கள் இது குறித்து கவலையடையத்
தேவையில்லை. இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது தொடர்பான எஸ்.ஒ.பி.
நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. எனினும் விரும்பத்தகாத
சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதி செய்ய போலீசாரின் ஒத்துழைப்புடன கடுமையான கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்வது அவசியமாகிறது என்று அவர் அறிக்கை ஒன்றில் சொன்னார்.
சிலாங்கூர் மாநிலத்தில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் போதைப்
பொருள் ஊடுருவலைத் தடுக்க வருகையாளர்களுக்கு சிறுநீர் சோதனை
நடத்துவதற்கான எஸ்.ஒ.பி. பரிந்துரையை மாநில அரசு
முன்வைத்துள்ளதாக நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.


