ஈப்போ, ஜன. 9- தைப்பிங் கோல குரோவிலுள்ள வர்த்தக வளாகம்
ஒன்றைச் சோதனையிட்ட உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச்
செலவின அமைச்சின் பேராக் மாநில அதிகாரிகள் 140 கிலோ எடை
கொண்ட ஒரு கிலோ சமையல் எண்ணைய் பொட்டலங்களை பறிமுதல்
செய்தனர்.
அந்த விற்பனை வளாகம் சமையல் எண்ணெய் பொட்டலங்களை பதுக்கி
வைத்து குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் விற்பதாக பொதுமக்கள் அளித்த
புகாரின் பேரில் நேற்று காலை 11.50 மணியளவில் இந்த அதிரடிச்
சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சின் பேராக்
மாநில இயக்குநர் டத்தோ கமாலுடின் இஸ்மாயில் கூறினார்.
இந்த ஓப் சாமார் நடவடிக்கையின் கீழ் அமலாக்க அதிகாரிகள்
வாடிக்கையாளர்கள் போல் அந்த கடைக்குச் சென்று பாக்கெட் சமையல்
எண்ணெய் வேண்டும் எனக் கேட்டுள்ளனர். எனினும், எண்ணெய் விற்றுத்
தீர்ந்து விட்டதாக அதன் பணியாளர்கள் அவர்களிடம் தெரிவித்துள்ளனர்
என்று அவர் இன்று இங்கு வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
கடையின் பணியாளர்கள் அளித்த பதிலில் சந்தேகம் கொண்ட அதிகாரிகள்
அந்த கடையில் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர். கடையின்
பொருள்கள் வைக்கும் கிடங்கில் 140 கிலோ எடை கொண்ட ஒரு கிலோ
பாக்கெட் எண்ணைய் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது அந்தச் சோதனையில்
தெரியவந்தது என்றார் அவர்.
இச்சோதனையில் மொத்தம் 350 வெள்ளி மதிப்பிலான அந்த சமையல்
எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறிய அவர், இந்த பதுக்கல்
நடவடிக்கை தொடர்பில் 1961ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச்
சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது என்றார்.


