ஷா ஆலம், ஜன. 9 - சிலாங்கூரில் எதிர்வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மலேசிய விளையாட்டுப் போட்டிக்கான (சுக்மா) செயலகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக மாநில அரசின் துணைச் செயலாளர் டத்தோ முகமது யாஷிட் சைரி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு சரவாக்கில் நடைபெற்ற சுக்மா போட்டியில் முகமது யாஷிட் சிலாங்கூர் குழுவின் துணைத் தலைவராக இருந்ததோடு பொது நிர்வாகத் துறையில் விரிவான அனுபவத்தைக் கொண்டவர் என்று விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.
கம்போடியாவில் நடைபெற்ற 2023 சீ போட்டிக்கான ஒளிபரப்பு மற்றும் வெளியீட்டு ஆலோசகராக பணியாற்றய அனுபவத்தைக் கொண்ட ஆஸ்ட்ரோ அரேனா ஒளியலையின் முன்னாள் மேலாளர் வேணு ராமதாஸ் சுக்மா தலைமை செயல் அதிகாரி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளத் தகவலையும் என்று அவர் வெளியிட்டார்.
சுக்மா சிலாங்கூர் 2026 விளையாட்டுப் போட்டிகள் சுமூகமாகவும் வெற்றிகரமாகவும் நடத்தப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நியமனங்கள் அமைந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த நியமனத்தைத் தொடர்ந்து, சுக்மா 2026 ஏற்பாடுகளை கவனிப்பதற்காக ஊராட்சி மன்றங்கள் , மாவட்ட அலுவலகங்கள் மற்றும் துணை நிறுவனங்கள் உள்ளிட்ட மாநில அரசுத் துறைகள் மற்றும் ஏஜென்சிகள் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளை இந்த செயலகம் ஒருங்கிணைக்கும் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
சிலாங்கூர் ஆகக் கடைசியாக கடந்த 1998ஆம் ஆண்டு இந்த பிரசித்தி பெற்ற விளையாட்டை ஏற்று நடத்தியது. அதன் பின்னர் எதிர்வரும் 2026இல் சுக்மா விளையாட்டு போட்டியை ஏற்று நடத்தும் வாய்ப்பினை சிலாங்கூர் பெற்றுள்ளது.
ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்ய மாநில அரசு 15 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளதாகவும் அதில் 90 விழுக்காடு மாநிலத்தில் உள்ள உள்கட்டமைப்புகளை தரம் உயர்த்தப் பயன்படுத்தப்படும் என்றும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாகக் கூறியிருந்தார்.


