ஷா ஆலம், ஜன. 9 - சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இல்லாத முதலீட்டுத்
திட்டத்தை நம்பி தனியார் நிறுவன குத்தகையாளர் ஒருவர் 59 லட்சம்
வெள்ளிக்கும் மேற்பட்டத் தொகையை இணைய மோசடிக் கும்பலிடம்
இழந்தார்.
பேஸ்புக் மூலம் வெளியான விளம்பரத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்ட 58
வயதுடைய அந்த குத்தகையாளர் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல்
அந்த முதலீட்டுத் திட்டத்தில் பங்கெடுக்கத் தொடங்கியதாக சிலாங்கூர்
போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.
அந்த குத்தகையாளர் சந்தேகப் பேர்வழியின் உத்தரவை ஏற்று ஆப்பிள்
ஸ்டோர் மூலம் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்துள்ளார். தனக்கு
விருப்பமான பங்கை வாங்குவதற்கு ஏதுவாக போதுமான அளவு நிதிக்
கையிருப்பைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் தங்களின்
உத்தரவுக்கேற்ப பண பரிவர்த்தனையையும் செய்ய வேண்டும் என
நிபந்தனை விதிக்கப்பட்டது என்றார் அவர்.
அந்த குத்தகையாளர் கடந்தாண்டு செப்டம்பர் முதல் நவம்பர் வரை எட்டு
வங்கிக் கணக்குகளில் 30 பரிவர்த்தனைகள் மூலம் 59 லட்சத்து 506
வெள்ளி 46 காசு தொகையை செலுத்தியுள்ளார் என ஹூசேன் அறிக்கை
ஒன்றில் தெரிவித்தார்.
வாக்குறுதியளிக்கப்பட்டபடி லாபத் தொகை கிடைக்காத நிலையில் தாம்
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த குத்தகையாளர் காஜாங் போலீஸ்
நிலையத்தில் நேற்று புகார் செய்தார் என அவர் குறிப்பிட்டார்.
இந்த மோசடி தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ்
விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.


