ஷா ஆலம், ஜன. 9 - பண்டார் சவுஜானா புத்ராவிலுள்ள மழலையர்
பராமரிப்பு மையத்தில் நான்கு மாத ஆண் குழந்தை ஒன்று கடந்த
வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
இச்சம்பவம் தொடர்பில் பண்டார் சவுஜானா புத்ரா வட்டாரத்திலுள்ள
கிளினிக் ஒன்றின் மருத்துவர் மாலை 3.29 மணியளவில் போலீசில் புகார்
செய்ததாக கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன்
முகமது அக்மாரிஸால் ராட்ஸி கூறினார்.
சுயநினைவற்ற நிலையில் அக்குழந்தையை அதன் பராமரிப்பாளர் அந்த
கிளினிக்கிற்கு கொண்டு வந்துள்ளார். அக்குழந்தையின் முகம் வெளிறிய
நிலையில் காணப்பட்டதோடு உதடு மற்றும் கால்களில் நீலம்
படர்ந்திருந்தது. மேலும் அக்குழந்தை சுவாசத் துடிப்பின்றியும் கண்களில்
அசைவின்றியும் காணப்பட்டது
இதனைத் தொடர்ந்து அக்குழந்தைக்கு மருத்துவர் சி.பி.ஆர். எனப்படும்
இதயத் துடிப்பு சிகிச்சை வழங்கினார். பின்னர் அக்குழந்தைக்கு ஆக்ஜிஸன்
சாதனம் பொருத்தப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் செர்டாங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
எனினும் உயிரைக் காக்க 30 நிமிடங்கள் மேற்கொள்ளப்பட்ட முயற்சி
பலனளிக்காத நிலையில் மாலை 5.05 மணியளவில் அக்குழந்தை
உயிரிழந்தது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் 2011ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1)(ஏ)
விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறிய அவர், அந்த காப்பகத்தின்
பணியாளர்கள் மற்றும் நடத்துநரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள
நிலையில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றார்.


