புக்கிட் மெர்தாஜம், ஜன. 9- இங்குள்ள ஜாலான் கூலிமில் கிரேன் ஒன்றின் மீது பட்டு அறுந்து விழுந்த தொலைத்தொடர்பு கேபிள் மோட்டார் சைக்கிளோட்டியின் கழுத்தில் சிக்கியதில் அவ்வாடவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்று மாலை 5.00 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் நாற்பது வயது மதிக்கத்தக்க ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக செபராங் பிராய் தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹெல்மி அரிஸ் கூறினார்.
இருபது வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் கூலிமிலிருந்து புக்கிட் மெர்தாஜம் நோக்கி கிரேன் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த கிரேனில் உள்ள பாரந்தூக்கியின் தூண் சாலையிலிருந்த தொலைத் தொடர்பு கேபிளை மோதியது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் சொன்னார்.
இந்த மோதல் காரணமாக அந்த கேபிள் அறுந்து சாலையில் விழுந்துள்ளது. அப்போது அச்சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த அந்த ஆடவரின் கழுத்தில் அந்த கேபிள் சிக்கியதைத் தொடர்ந்து அவர் நிலைதடுமாறி சாலையில் விழுந்ததாக அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் அவ்வாடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அவரது உடல் பரிசோதனைக்காக புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது என்றார் அவர்.
இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


