கோலாலம்பூர், ஜன. 9- கனரக வாகனச் சோதனையில் தகுதி
அங்கீகாரத்தை வழங்குவதில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஊழல் தொடர்பில்
தலைநகரிலுள்ள கனரக வாகன பரிசோதனை மையம் ஒன்றின் 13
அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.
வாக்குமூலம் அளிப்பதற்காக புத்ராஜெயாவிலுள்ள எஸ்.பி.ஆர்.எம்.
அலுவலகத்திற்கு வந்த 20 முதல் 40 வயதுக்குட்பட்ட அவர்கள்
அனைவரும் நேற்று 1.00 மணி மற்றும் 2.00 மணிக்கு இடையிலும் காலை
10.00 மணி மற்றும் மாலை 3.00 மணிக்கு இடையிலும் கைது
செய்யப்பட்டதாக வட்டாரம் ஒன்று கூறியது.
தாங்கள் பணிபுரியும் இடத்தில் தங்களிடம் வரும் வாகனங்களை தகுதிச்
சோதனையில் வெற்றியடையச் செய்வதற்கு பிரதியுபகாரமாக அவர்கள்
மாதந்தோறும் 150 முதல் 1,500 வெள்ளி வரை ரொக்கமாகப் பெற்றது
தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்த வட்டாரம்
குறிப்பிட்டது.
கடந்த திங்கள்கிழமை ஆறு வாகனப் பரிசோதனை அதிகாரிகள் கைது
செய்யப்பட்டதன் தொடர்ச்சியாகவும் போக்குவரத்து அமைச்சினால்
ஒப்படைக்கப்பட்ட ஏஜெண்ட் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்
பலனாகவும் இந்த கைது நடவடிக்கை அமைந்துள்ளது எனக்
கூறப்படுகிறது.
இந்த ஊழல் விவகாரம் தொடர்பில் 22 பரிசோதனை அதிகாரிகள், ஒரு
ஏஜெண்ட் மற்றும் இரு ரன்னர் எனப்படும் இடைத்தரகர்கள் உள்பட 22 பேர்
இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இந்த கைது நடவடிக்கையை உறுதிப்படுத்திய எஸ்.பி.ஆர்.எம். துணைத் தலைமை ஆணையர் (நடவடிக்கை) டத்தோஸ்ரீ அகமது குஸைரி யாஹ்யா. இதன் தொடர்பில் 2009ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம். சட்டத்தின் 16(பி)(ஏ) பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
நேற்று கைது செய்யப்பட்ட அனைத்து 13 பரிசோதனை அதிகாரிகளும்
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டப் பின்னர் எஸ்.பி.ஆர்.எம். ஜாமீனில்
விடுவிக்கப்படுவர் என்றார்.


