கோலாலம்பூர், ஜன. 8- இணைய மோசடிகளைச் கையாள்வதற்கான மிகவும் ஆக்ககரமான வியூகங்களை அரசாங்கம் ஆய்வு செய்து அதனை எதிர்காலத்தில் செயல்படுத்தும் என்று துணைத் தொலைத் தொடர்பு அமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.
தேசிய மோசடி தடுப்பு செயலியின் உருவாக்கம் மற்றும் அனைத்து பங்களிப்பாளர்களின் ஒத்துழைப்பின் மூலம் இணைய மோசடிக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான உறுதியான நடவடிக்கையை அரசாங்கம் தொடர்ந்து எடுக்கும் என்று அவர் சொன்னார்.
ஒ.டி.பி. (ஒரு முறை கடவுச்சொல்) முறையிலிருந்து எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி ) சேவைக்கு மாற்றம்,
அங்கீகார விதிகளை கடுமையாக்குதல் மற்றும் நிதி மோசடி குறித்து புகாரளிக்க ஒரு சிறப்பு தொலைபேசி சேவையை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகள் நேர்மறையான முடிவுகளைத் தந்துள்ளன என்று அவர் சொன்னார்.
இருப்பினும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது என்று அவர் முகநூலில் வெளியிட்ட ஒரு குறிப்பில் கூறினார்.
துணை நிதியமைச்சர் லிம் ஹுய் யிங்குடன் நேற்று தாம் நடத்திய சந்திப்பில் அதிகளவில் பரவி வரும் இணைய மோசடி விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக தியோ கூறினார். இந்த சந்திப்பில் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி.) மற்றும் பேங்க் நெகாரா பிரதிநிதிகளும் கலந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.


