கோலாலம்பூர், ஜன 8– சீனாவின் ஜிஸாங் சுயாட்சிப் பகுதியில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்த சோகமான பேரழிவைத் தொடர்ந்து சீன அரசாங்கம் மற்றும் மக்களுக்கு மலேசியாவின் ஒருமைப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தினார்.
இழப்பு மற்றும் பேரழிவுடன் போராடும் மக்களைச் சுற்றி எங்கள் எண்ணங்கள் வட்டமிடுகிறது. இந்த கடினமான தருணத்தை எதிர்கொள்ளவும் அதிலிருந்து மீண்டு வரவும் தேவையான வலிமை, தைரியம் மற்றும் ஆதரவை அவர்கள் பெற பிரார்த்திக்கிறேன் என்று அன்வார் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வலுவாக உணரப்பட்ட நேபாளத்திற்கும் மலேசியாவின் ஆதரவையும் பிரதமர் புலப்படுத்தினார். ஏனெனில் பேரழிவுக்குப் பிறகு இரு நாடுகளும் மீண்டும் கட்டியெழுப்புவது மற்றும் சீரமைப்பது போன்ற சவால்களை எதிர்கொள்கின்றன என அவர் குறிப்பிட்டார்.
நேபாள எல்லைக்கு அருகில், தெற்கு சீனாவில் உள்ள திபெத்தில் நேற்று ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு பீகார், அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளில் உணரப்பட்டது.


