கோல லங்காட், ஜன. 7 - சிலாங்கூர் மாநிலத்தில் பொது இடங்களில் சுற்றித் திரியும் விலங்குகளைப் பாதுகாக்க மாநில அரசு கொல்லாமைக் கொள்கையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
பிடிபடும் ஒவ்வொரு நாயும் கருத்தடை மற்றும் தடுப்பூசி போடுவதற்காக அந்தந்த ஊராட்சி மன்றத்தின் தற்காலிக தடுப்பு மையத்திற்கு அனுப்பப்படும் என்று ஊராட்சி மன்றம் மற்றும் சுற்றுலா துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சூயி லிம் கூறினார்.
ஊராட்சி மன்றங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளை உள்ளடக்கிய இந்த திட்டத்திற்கு நிதியளிக்க தமது அலுவலகம் தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்தக் கொள்கையை செயல்படுத்துவதில் முன்னோடியாக இருப்பதற்கான கோரிக்கைக்கு பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் பதிலளித்துள்ளது. ஆனால் அதற்கு அதிக நிதி தேவைப்படுகிறது.
எங்கள் சார்பில் 100,000 முதல் 200,000 வெள்ளி வரை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.எஞ்சிய தொகையை ஊராட்சி மன்றங்கள் ஏற்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
நேற்று இங்குள்ள ஆம்வர்டன் கோவ் கோல்ப் அண்ட் ஐலண்ட் ரிசார்ட்டில் நடைபெற்ற ஊராட்சி மன்றங்களின் சிறந்த நடைமுறைகளை தரநிலைப்படுத்துவது மீதான பயிற்சிப் பட்டறையைத் தொடக்கி வைத்தப்பின்னர் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
வளர்ப்பு பிராணிகளுக்கு லைசென்ஸ் வழங்குவதில் நாய் உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி போடுவதை உறுதிசெய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அமலாக்கத்தில் இந்த கொள்கை கவனம் செலுத்துகிறது என்று இங் குறிப்பிட்டார்.


