ஷா ஆலம், ஜன. 7- ஒற்றுமை அரசில் நிலவும் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் அடிப்படையற்ற அறிக்கைகளை வெளியிடும் பொறுப்பற்றத் தரப்பினரின் செயலை கெஅடிலான் இயக்கவாதியான ஜஸ்டின்ராஜ் சவரிமுத்து கடுமையாகச் சாடினார்.
ஒற்றுமை அரசு வலுவான கூட்டணியுடன் உறுதியான அரசாங்கமாக விளங்குவதாகக் கூறிய அவர், மக்களின் ஆதரவையும் செல்வாக்கையும் இழந்த தரப்பினர் மக்கள் ஆதரவை மீண்டும் பெறுவதற்கு எள்ளி நகையாடும் மற்றும் ஏளனம் செய்யும் அணுகுமுறையைக் கையாள்கின்றனர் என்று சொன்னார்.
பிறரின் கவனத்தை ஈர்ப்பதற்காக புரியும் இத்தகையச் செயல் மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது.
அவர்களின் இத்தகைய நடவடிக்கைகள் தேசத்தின் உருவாக்கத்திற்கு எந்த வகையிலும் உதவி புரியாது என்பதோடு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை அளவிடுவதற்கான அளவுகோலாக ஒருபோதும் அமையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய சமூகத்தின் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்ளும் தரப்பினர் தங்கள் கருத்துகளை முன்வைக்கும் பாணி அதிருப்தியளிக்கும் வகையில் உள்ளது. அவர்கள் தங்கள் கருத்துகளை அவ்வளவு கடுமையாக முன்வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
நாடு எத்தகைய சவால்களை எதிர்கொண்டுள்ளது என்பதை அவர்கள் உணரத் தவறிவிட்டனர். கடுமையான தொனியில் பேசுவதால் மட்டும் உண்மை அவர்கள் பக்கம் இருக்கிறது என்று பொருள்படாது.
நாட்டின் வளப்பத்திற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என்பதுதான் தற்போதைய தேவையாகும் என்றார் அவர்.
கூட்டாக மேம்பாட்டைக் கொண்டு வருவதற்கு ஏதுவாக நாட்டிலுள்ள அனைத்து இனங்களையும் ஒன்றிணைக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒற்றுமை அரசின் தொலைநோக்கு லட்சியம் மற்றும் பணி இலக்கு முயற்சிக்கு முரணாக அத்தரப்பினரின் இச்செயல் அமைகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
நாடு மேம்பாடும் சுபிட்சமும் காண வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்ட பல்வேறு தரப்பினர் ஒன்றிணைந்த காரணத்தால் ஒற்றுமை அரசாங்கம் உருவாக்கம் கண்டது.
குரல் கொடுப்பதில் உள்ள உறுதியான நிலைப்பாட்டை இந்நாட்டிலுள்ள இந்திய சமூகம் உணர்ந்திருக்க வேண்டும் என்பதோடு நாட்டின் வளப்பத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஒற்றுமை அரசில் காணப்படும் ஒருங்கிணைப்பை அனைத்துத் தரப்பினரும் மதித்து நடக்க வேண்டுமாய் நான் கேட்டுக் கொள்கிறேன். நாட்டின் நல்லிணக்கத்திற்கும் மேம்பாட்டிற்கும் ஊறு விளைவிக்க வேண்டாம் என அவர் நினைவூட்டினார்.
மலேசியாவின் ஒளிமயமான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதன் தொலைநோக்கு லட்சியம் மற்றும் பணி இலக்கை வெற்றியடையச் செய்வதில் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என கேட்டுக் கொள்கிறேன் என்று தமது அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.


