ஜெர்த்தே, ஜன. 6- போலீஸ் சோதனையிலிருந்து தப்பும் நோக்கில்
ஆற்றில் குதித்த ஆடவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் இங்குள்ள செபெராங் கஸ்டம், மலேசிய மீன் வள மேம்பாட்டு
வாரிய கட்டிடம் அருகே நிகழ்ந்தது.
நாற்பத்தைந்து வயதுடைய அந்த ஆடவரின் உடல் சம்பவம் நிகழ்ந்த
இடத்திலிருந்து சற்று தொலைவில் இன்று காலை 10.25 மணியளவில்
கண்டு பிடிக்கப்பட்டதாக பெசுட் மாவட் இடைக்காலப் போலீஸ் தலைவர்
டிஎஸ்பி முகமது சானி முகமது சாலே கூறினார்.
நேற்றிரவு 7.45 மணியளவில் படகுத் துறை அருகே இருந்த மீன்பிடி
படகிலிருந்த அந்த ஆடவர் பெசுட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின்
போதைப் பொருள் தடுப்பு போலீசாரின் வருகையை அறிந்து திடீரென
ஆற்றில் குதித்ததாக அவர் தெரிவித்தார்.
ஆற்றில் விழுந்த அந்நபரை காப்பாற்ற பொது மக்கள் மேற்கொண்ட
முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து இரவு 8.30
மணியளவில் தேடுதல் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது என்று அவர்
சொன்னார்.
நேற்றிரவு 8.30 மணியளவில் தேடுதல் நடவடிக்கை நிறுத்தப்பட்டு இன்று
காலை மீண்டும் தொடங்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின்
முக்குளிப்பாளர்கள் ஆற்றின் அடிப்பகுதியில் மேற்கொண்ட தேடுதல்
நடவடிக்கையில் அவரது உடல் கண்டு பிடிக்கப்பட்டது என்றார் அவர்.
அவ்வாடவரின் உடல் பரிசோதனைக்காக பெசுட் மருத்துவமனைக்கு
கொண்டுச் செல்லப்பட்டதாகக் கூறிய அவர், போதைப் பொருள்
தொடர்பான 10 குற்றப்பதிவுகளை அவர் கொண்டிருப்பது தொடக்கக் கட்ட
விசாரணையில் தெரியவந்தது என்றார்.


