புத்ராஜெயா, ஜன. 6 - அதிக எடையை ஏற்றும் வாகனங்கள் தொடர்பான
விவகாரத்தை சட்ட ரீதியான அம்சங்கள் வாயிலாக கையாள்வதில்
போக்குவரத்து அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக அதன் அமைச்சர்
அந்தோணி லோக் கூறினார்.
இதன் அடிப்படையில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டம்
(சட்டம் 333), 2010ஆம் ஆண்டு பொது தரைப் போக்குவரத்துச் சட்டம்
(சட்டம் 715) மற்றும் 1987ஆம் ஆண்டு வர்த்தக வாகன லைசென்ஸ்
வாரியச் சட்டம் (சட்டம் 334) ஆகியவற்றில் திருத்தம் செய்வது அல்லது
தரம் உயர்த்துவது குறித்து தமது தரப்பு ஆராய்ந்து வருகிறது என்று அவர்
சொன்னார்.
அதிக எடையை ஏற்றி வரும் வாகனங்களுக்கு அதிப்படியான எடைக்கு
ஏற்ப அபராதத் தொகையை நிர்ணயிப்பது குறித்தும் பரிசீலனை
செய்யப்பட்டு வருகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக நீடித்து வரும் அதிக எடை ஏற்றும் வாகனங்கள்
தொடர்பான பிரச்சினைக்கு இவ்வாண்டில் உண்மையாகவே முழுமையான
தீர்வு காண நாங்கள் முயற்சித்து வருகிறோம்.
எங்களின் இந்த முயற்சியில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அதிகம்
தேவை என்று போக்குவரத்து அமைச்சின் 2025 புத்தாண்டு சிறப்புரை
நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சரக்கு போக்குவரத்து சூழியல் முறையை அமைச்சு ஆராயும் அதே
வேளையில் கனரக வாகனங்கள் அதிக எடையை ஏற்றும் பிரச்சினைக்குத்
தீர்வு காண துறைமுக நடத்துநர்களுடனும் ஒத்துழைக்கும் என்று லோக்
சொன்னார்.
அதிக எடை ஏற்றும் விவகாரத்தில் சரக்கு பெறுநர்களையும் பொறுப்பேற்கச் செய்வது குறித்தும் நாங்கள் ஆராயவிருக்கிறோம். அதிக எடை விவகாரத்தில் அவர்களும் பொறுப்புதாரியாக இருப்பதற்கான சாத்தியம் உள்ளது என்று அவர் கூறினார்.


