கோல லங்காட், ஜன. 6 - எதிர்காலத்தில் சிலாங்கூரில் நடத்தப்படும் இசை
நிகழ்ச்சிகளுக்கான விதிமுறைகளை கடுமையாக்குவதற்கான அவசியம்
குறித்து மாநில அரசு பரிசீலித்து வருகிறது.
இத்தகைய இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் உயிரிழக்கும் சம்பவங்கள்
நிகழ்வதைத் தவிர்ப்பதற்காக பாதுகாப்பு அம்சங்களில் கூடுதல் கவனம்
செலுத்தப்படும் என்று ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
டத்தோ இங் சுயி லிம் கூறினார்.
சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் 2025 இயக்கத்தை முன்னிட்டு மாநில
அரசு பொழுது போக்கு வரியைக் குறைத்துள்ளது. ஆகவே, இத்தகைய
நிகழ்ச்சிகளில் உயிரிழப்புகள் ஏற்படுதைத் தவிர்ப்பதற்கு ஊராட்சி
மன்றங்கள் காவல் துறையிடன் இணைந்து விதிமுறைகளை
கடுமையாக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இசை நிகழ்ச்சிக்கான அனுமதி வழங்குவதில் அமல்படுத்தப்படும் உத்தேச
நிபந்தனைகளில் வருகையாளர்களை ஸ்கேன் செய்வதும் அடங்கும் எனக்
கூறிய அவர், வரும் புதன்கிழமை நடைபெறவிருக்கும் மாநில ஆட்சிக்குழு
கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என்றார்.
இங்குள்ள ஹோட்டல் அம்வெர்ட்ட்டன் கோவ் கோல்ப் அண்ட் ஐலண்ட்
ரிசோர்ட்டில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான அனுமதி வழங்குவதை
தற்காலிகமாக ஒத்தி வைக்கும் நடவடிக்கை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு
இழப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் சொன்னார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிக முதலீடுகளைச் செய்துள்ளதால்
பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி வழங்குவதை ஒத்தி வைக்கும் காவல் துறையினரின் நடவடிக்கை எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சன்வேயில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட 20
முதல் 40 வயது வரையிலான நால்வர் மரணமடைந்தது தொடர்பில்
காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாக ஊடகங்கள் முன்னதாக
செய்தி வெளியிட்டிருந்தன.


