கோலாலம்பூர், ஜன. 6: பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ராணுவ நிறுவனங்களில் பகடிவதை அல்லது ராகிங் உள்ளிட்ட விவகாரங்களில் பாதுகாப்பு அமைச்சகம் ஒருபோதும் விட்டு கொடுக்கும் போக்கை கடைப்பிடிக்காது என்று பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் கூறினார்.
துன்புறுத்தல் விவகாரம் தொடர்பான புகார்கள் விசாரிக்கப்பட்டு அதில் தீவிர கவனம் செலுத்தப்படும் என்றார்.
"குற்றவாளியாக இருந்தால், அந்த நபர் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்" என்று அவர் பெர்னாமாவிடம் வாட்ஸ்அப் செய்தி மூலம் கூறினார்.
நாட்டின் தலைநகரில் உள்ள இராணுவ நிறுவனங்களில் மாணவர்களை அதிகளவில் பகடிவதை செய்தல் அல்லது ராகிங் செய்யும் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து கேட்டபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனவரி 3 ஆம் தேதி இராணுவ நிறுவங்களில் பல மாணவர்களை உள்ளடக்கிய பகடிவதை செய்யும் சம்பவம் அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று அந்த நாடாளுமன்ற உறுப்பினர் முகநூல் பக்கத்தில் தெரிவித்தார்.
மேலும் உண்மையை வெளிக்கொணர பெற்றோரின் குரல்கள் நசுக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
- பெர்னாமா


