சிரம்பான், ஜன. 6 - சிரம்பான்-கோல பிலா சாலையில் (புக்கிட் புத்துஸ்)
நேற்று மாலை 6.45 மணியளவில் நிகழ்ந்த மூன்று வாகனங்கள்
சம்பந்தப்பட்ட விபத்தில் கணவன்-மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிரம்பானிலிருந்து கோல பிலா நோக்கிச் சென்று கொண்டிருந்த 22 வயது
ஆடவர் ஓட்டிய புரோட்டோன் எக்ஸோரா ரகக் கார் கட்டுப்பாட்டை
இழந்து எதிர்த்தடத்தில் வந்து கொண்டிருந்த பெரேடுவா கஞ்சில் மற்றும்
பெரேடுவா அக்ஸியா ரகக் கார்களை மோதியது தொடக்கக் கட்ட
விசாரணையில் தெரிய வந்துள்ளதாக சிரம்பான் மாவட்ட போலீஸ்
தலைவர் ஏசிபி முமது ஹத்தா சே டின் கூறினார்.
இந்த விபத்தின் காரணமாக மூன்று கார்களும் சிரம்பான் நோக்கிச்
செல்லும் தடத்தில் உள்ள இரும்பு தடுப்புக் கம்பியை மோதி நின்றதாக
அவர் தெரிவித்தார்.
பெரேடுவா அக்ஸியா காரில் பயணித்த அந்த தம்பதியருக்கு இவ்விபத்தில்
தலையில் பலத்தக் காயங்கள் ஏற்பட்டன. ஒருவர் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்த வேளையில் மற்றொருவர் சிரம்பான், துவாங்கு ஜாபர்
மருத்துவமனையில் மரணமடைந்தார் என அவர் அறிக்கை ஒன்றில்
குறிப்பிட்டார்.
புரோட்டோன் எக்ஸோரா காரின் ஓட்டுநருக்கு இரு கால்களிலும் எலும்பு
முறிவு ஏற்பட்ட வேளையில் பெரேடுவா கஞ்சில் காரோட்டி லேசான
காயங்களுக்குள்ளானார் என்றார் அவர்.
இந்த விபத்து தொடர்பில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச்
சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக
அவர் மேலும் சொன்னார்.


