கோத்தா பாரு, ஜன. 6 - கடந்தாண்டு டிசம்பர் மாதம் 1ஆம் தேதி
சட்டவிரோத எல்லைக் கடப்பு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டது
முதல் மலேசியா-தாய்லாந்து எல்லையில் குற்றச்செயல்களின்
எண்ணிக்கை குறைந்துள்ளது.
மலேசியா-தாய்லாந்து எல்லையின் கிளந்தான் பகுதியில் பாதுகாப்பை
வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை
நேர்மறையான பலனைத் தந்துள்ளது என்று கிளந்தான் மாநில போலீஸ்
தலைவர் டத்தோ முகமது யூசுப் மாமாட் கூறினார்.
எல்லை கடந்த குற்றவியல் நடவடிக்கைள் குறைந்துள்ளதோடு
சட்டவிரோதமாக எலையைக் கடந்த காரணத்திற்காக எழுவரை போலீசார்
கைது செய்துள்ளனர் என்று அவர் சொன்னார்.
இன்று இங்குள்ள மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற
கிளந்தான் மாநில போலீஸ் தலைமையகத்தின் மாதாந்திர ஒன்று கூடும்
நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதாகக்
கூறிய அவர், 1959/1963ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் 5(2) வது
பிரிவின் கீழ் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது என்றார்.
மலேசிய அதிகாரிகளின் இந்நடவடிக்கையை தாய்லாந்து அதிகாரிகள்
பெரிதும் வரவேற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
மலேசியாவைப் பின்பற்றி தாங்களும் சட்டவிரோதமான முறையில்
எல்லையை கடப்போரை கைது செய்யவுள்ளதாக தாய்லாந்து அதிகாரிகள்
தம்மிடம் தெரிவித்துள்ளதாக முகமது யூசுப் சொன்னார்.
தும்பாட் மற்றும் ஜெலியைக் காட்டிலும் பாசீர் மாஸ் மாவட்டத்தைத் தான்
குற்றவாளிகள் தங்கள் கடத்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்துகின்றனர்
என்று அவர் குறிப்பிட்டார்.
பாசீர் மாஸ் மாவட்டத்தில் மட்டும் 20 சட்டவிரோத எல்லை கடப்புப்
பாதைகள் உள்ளன. போலீசாரும் பி.ஜி.ஏ. எனப்படும் பொது தற்காப்பு
படையினரும் இப்பகுதியில் தீவிர சோதனை நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகின்றனர் என்றார் அவர்.


