புத்ராஜெயா, ஜன. 6 - முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு
வீட்டுக் காவல் அனுமதி வழங்குவது தொடர்பான மாட்சிமை தங்கிய
பேரரசரின் பின் இணைப்பு உத்தரவு உள்ளதா என்பதை உறுதி செய்வதற்கு
செய்யப்பட்ட விண்ணப்பம் இன்று இங்குள்ள மேல் முறையீட்டு
நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் கூடுதல் ஆதாரங்களைத் சமர்ப்பிப்பததற்கு அனுமதி
கோரி எதிர்த்தரப்பு மனு செய்திருந்த நிலையில் நஜிப்பின் வழக்கறிஞர்
டான்ஸ்ரீ முகமது ஷாபி அப்துல்லா சமர்பித்த வாதத் தொகுப்பை மேல்
முறையீட்டு நீதிபதிகளான டத்தோ அஜிசா நவாவி, டத்தோ அஸ்ஹாரி
கமால் ரம்லி, டத்தோஸ்ரீ முகமது பைருஸ் ஜெப்ரில் ஆகியோரடங்கிய
அமர்வு செவிமடுத்தது.
எஞ்சியுள்ள சிறைவாச காலத்தை நஜிப் வீட்டுக் காவலில் கழிப்பதற்கு
அனுமதிக்கும் மாமன்னரின் பின்சேர்ப்பு உத்தரவு உண்மையில் உள்ளது
என்பதை நிரூப்பதற்கு கூடுதல் ஆதாரங்களை முன்வைக்க முன்னாள்
பிரதமர் மனு செய்திருந்தார்.
எதிர்த்தரப்பின் வாத தொகுப்பு சமர்ப்பைச் செவிமடுத்தப் பின்னர்,
பதினாறாவது மாமன்னரின் பின்சேர்ப்பு உத்தரவு தொடர்பில் தாங்கள்
சமர்ப்பித்த மனுவை கடந்த 2024 ஜூலை 3ஆம் தேதி உயர் நீதிமன்றம்
தள்ளுபடி செய்ததை எதிர்த்து எதிர்த்தரப்பு செய்த மேல் முறையீடு
தொடர்பான நஜிப்பின் மனுவை நீதிபதிகள் செவிமடுத்தனர்.
அந்த பின்சேர்ப்பு உத்தரவு தொடர்பில் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ
டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி மற்றும் கட்சியின் உதவித் தலைவர்
டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் உள்ளிட்ட நால்வர் தாக்கல்
செய்த அப்பிடவிட் வெறும் செவிவழிச் செய்தி என்பதால் அதனை ஏற்க
முடியாது என்று உயர் நீதிபதி டத்தோ அமார்ஜிட் சிங் தனது தீர்ப்பில்
கூறியிருந்தார்.
கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் தேதி மாமன்னர்
வெளியிட்டதாக க் கூறப்படும் பின் இணைப்பு உத்தரவு உள்ளதா என்பது
குறித்து வாதிகள் பதிலளிக்கவும் விளக்கமளிக்கவும் கோரி 71
வயதான நஜிப் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.


