கியூபெக், ஜன 6 - லிபரல் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வது தொடர்பான முடிவை கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று அறிவிப்பார் என்று கனடிய நாளேடான தி குளோப் அண்ட மெயில் மூன்று வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
ட்ரூடோ எப்போது பதவி விலகல் தொடர்பான தனது திட்டத்தை அறிவிப்பார் என்பது தங்களுக்கு நிச்சயமாகத் தெரியாது என்றும் எனினும், புதன்கிழமை நடைபெறவிருக்கும் ஒரு முக்கிய தேசிய கலந்துரையாடல் கூட்டத்திற்கு முன்பு அது நடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த நாளேடு தெரிவித்தது.
ட்ரூடோ உடனடியாக வெளியேறுவாரா அல்லது புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை பிரதமராக நீடிப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அறிக்கை கூறியது.
லிபரல் கட்சி கடும் சிக்கலில் சிக்கி முதல் முறையாக நாடாளுமன்றத்தில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு அக்கட்சியின் தலைவராக ட்ரூடோ பொறுப்பேற்றார்.


