இஸ்தான்புல், ஜன. 6 - இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல் காரணமாக
காஸாவில் சுமார் 1,000 பள்ளிவாசல்கள் சேதமடைந்ததாக பாலஸ்தீன
அதிகாரிகளை மேற்கோள் காட்டி அனாடோலு ஏஜென்சி செய்தி
வெளியிட்டுள்ளது.
இந்த தொடர் தாக்குதல்களில் 815 இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள்
முற்றாக அழிந்த வேளையில் மேலும் 151 தலங்கள் பகுதி சேதமடைந்தன
என்ற பாலஸ்தீன வகாஃப் மற்றும் சமய விவகார அமைச்சு கூறியது.
கடந்த 2024ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இந்த
இனப்படுகொலைப் போரில் மேலும் 19 மையத்துக் கொல்லைகளும்
மூன்று தேவாலயங்களும் அழிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அறிக்கை
தெரிவித்தது.
கடந்தாண்டு முழுவதும் கிழக்கு ஜெருசலத்தில் உள்ள அல்-அக்சா
பள்ளிவாசல் மீது குடியேற்றவாசிகள் 256 முறை ஆக்கிரமிப்பு
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
கடந்தாண்டு டிசம்பர் 25 முதல் இவ்வாண்டு ஜனவரி 2 வரை மொத்தம்
2,567 குடியேறிகள் பள்ளிவாசல் வளாகத்தில் நுழைந்து ஹனுக்கா
விடுமுறை கால விழாவை ஒரு வாரத்திற்கு கொண்டாடியதாக அமைச்சு
குறிப்பிட்டது.
மேற்கு கரையில் மட்டும் 20 பள்ளிவாசல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்
நடத்தியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.
கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் காஸா மீது
இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனப்படுகொலைத் தாக்குதல்களில்
இதுவரை 45,800 பேர் கெல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில்
பெரும்பாலோர் சிறார்கள் மற்றும் பெண்களாவர்.
காஸாவில் நிகழ்ந்த போர்க் குற்றங்களுக்காக இஸ்ரேலியப் பிரதமர்
பெஞ்சமின் நெதான்யாஹூ மற்றும் முன்னாள் தற்காப்பு அமைச்சர்
யோஹாவ் கேலண்ட் ஆகியோருக்கு எதிராக அனைத்துலக குற்றவியல்
நீதிமன்றம் கடந்தாண்டு நவம்பர் மாதம் கைது ஆணை பிறப்பித்தது.


