ஷா ஆலம், ஜன. 6 - சவுஜானா உத்தாமா, தாமான் ஸ்ரீ ஆலம், நீர் தேக்க
தடுப்புச் சுவர இடிந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு
வாக்குறுதிகளிக்கப்பட்டபடி இழப்பீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய
மாநில அரசு தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பில் கடந்த
வியாழக்கிழமை நடத்தப்படவிருந்த பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்ட
நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் எந்த முடிவும் இதுவரை
எடுக்கப்படாமலிருப்பதாக பாயா ஜெராஸ் தொகுதி ஒருங்கிணைப்பாளர்
முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.
பேச்சுவார்த்தைக்கான புதிய தேதியை மேம்பாட்டாளர் இன்னும்
வழங்கவில்லை. கூடுதல் கால அவகாசத்தை மேம்பாட்டாளர்
கோரியுள்ளார். அடுத்த வாரம் வரை நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.
அதன் பின்னர் அடுத்தக் கட்ட நடவடிக்கையை எடுக்கும் அதே
வேளையில் குடியிருப்பாளர்களுக்கு வேண்டிய உதவிகளையும்
வழங்குவோம் என அவர் சொன்னார்.
இதனிடையே, இது போன்றச் சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை
உறுதி செய்ய வீடமைப்புத் திட்டங்களுக்கு திட்டமிடல் அனுமதி
வழங்குவது தொடர்பான கொள்கைகளை மாநில அரசு மறுஆய்வு செய்ய
வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேம்பாட்டாளர் காரணமாக வெள்ளம் ஏற்படுவது இதன் முதன் முறை
அல்ல. அதே சமயம் கடைசி முறையும் அல்ல. இது அடிக்கடி நிகழ்கிறது.
புதிய வீடமைப்புத் திட்டங்கள் தேவையானதாக இருந்தாலும் சில
சமயங்களில் பழைய குடியிருப்பு பகுதிகளுக்கு எதிர்மறையான
விளைவுகளை ஏற்படுத்துகிறது என்றார் அவர்.
பாதிக்கப்பட்ட மக்களின் சுமையைக் குறைப்பதற்கு சமூக நலத் துறை
மற்றும் ஸக்கத் வாரியம் உள்ளிட்ட தரப்பினரின் உதவியைப் பெறும்
முயற்சியில் தாங்கள் ஈடுபட்டு வருவதாகவும் கைருடின் தெரிவித்தார்.
கடந்த மாதம் 29ஆம் தேதி நீர் தேக்க தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததால்
ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அந்த குடியிருப்பு பகுதியிலுள்ள 200 வீடுகள்
பாதிக்கப்பட்டன.


