ஷா ஆலம், ஜன. 5: மேரு, கிள்ளான் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் காவல்துறை அதிகாரி போல் வேடமணிந்து வெளிநாட்டவர் குடும்பத்தைக் கொள்ளையடித்ததாக சந்தேகத்தின் பேரில் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டார்.
உள்ளூர் நபர் ஒருவர் தன்னை ஒரு காவல்துறை அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, ரிம4,000 கேட்டு பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது என வடக்கு கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி எஸ் விஜய ராவ் கூறினார்.
அச்சுறுத்தலுக்கு ஆளாகிய பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரின் குடும்பத்தினரும் 23 வயதுடைய சந்தேக நபரிடம் இரண்டு தங்க மோதிரங்களையும் கையடக்கத் தொலைபேசியையும் தந்ததாக அவர் கூறினார்.
"சந்தேக நபர் ஒரு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார். அதன் வகை மற்றும் பதிவு எண் கண்டறியப்படவில்லை.நேற்று அதிகாலை 1.24 மணியளவில் இச்சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் செய்யப்பட்டது," என அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவியல் சட்டப் பிரிவு 392 மற்றும் பிரிவு 170 இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக கொள்ளையில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் இப்போது ஆறு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக விஜய ராவ் கூறினார்.
"பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், காவல்துறை அதிகாரி போல் வேடமணிந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் தனிநபர்களிடம் எளிதில் ஏமாறாமல் இருக்குமாறும் காவல்துறை கேட்டு கொண்டது," என்று அவர் கூறினார்.
– பெர்னாமா


