கோலாலம்பூர், ஜன 5: நேற்றிரவு அம்பாங்கில் உள்ள ஒரு வணிக மையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் 53 சட்டவிரோதக் குடியேறிகளை "Op Kutip" சிறப்பு சோதனை நடவடிக்கையில் குடிவரவுத் துறை (JIM) கைது செய்தது
அவர்கள் இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், இந்தியா, நேபாளம், ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், மியான்மர், ஸ்வீடன், தான்சானியா, மொராக்கோ, சோமாலியா, நைஜீரியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 33 ஆண்கள், 20 பெண்கள் ஆவர் என்று சிலாங்கூர் குடிவரவு இயக்குநர் கைருல் அமினஸ் கமருடின் தெரிவித்தார்.
"கைது செய்யப்பட்ட அனைவரும் 14 முதல் 65 வயதுடையவர்கள் மற்றும் சரியான ஆவணங்கள் இல்லாதவர்கள்," என்று அவர் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்
சோதனையின் போது சில வெளிநாட்டினர் பல்வேறு காரணங்களை கூறி ஆக்ரோஷமாக செயல்பட்டதாகவும், சிலர் கைது செய்யப்படுவதை தவிர்க்க மயக்கம் வருவது போலவும் நடித்ததாகவும் கைருல் அமினஸ் விளக்கினார்.
"35 சிலாங்கூர் குடிவரவு அதிகாரிகளால் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய சோதனையில் மொத்தம் 141 நபர்கள் சோதனை செய்யப்பட்டனர்," என்று அவர் கூறினார்.
குடிவரவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 6(1)(c) மற்றும் பிரிவு 15 (1) (c) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றும், தடுத்து வைக்கப்பட்ட அனைவரும் ஆவணப்படுத்தல் செயல்முறைக்காக செமினி குடிவரவு டிப்போவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
– பெர்னாமா


