(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜன. 4 - லீமாஸ் எனப்படும் பௌத்த, கிறிஸ்துவ, இந்து , சீக்கிய மற்றும் தாவோ சமய செயல்குழுவின் 2025ஆம் ஆண்டு மானியத்திற்கான முதல் கட்ட விண்ணப்பங்கள் இம்மாதம் (ஜனவரி) 2ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.
இந்த மானியத்தைப் பெறுவதற்கு சிலாங்கூர் மாநிலத்திலுள்ள ஆலயங்கள் உள்ளிட்ட முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராம்டு தெரிவித்தார்.
மேற்குறிப்பிட்ட தேதிக்குள் https://limas.selangor.gov.my என்ற இணைப்பின் வாயிலாக இந்த விண்ணப்பங்களை அனுப்பும்படியும் வழிபாட்டுத் தலங்களின் பொறுப்பாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
முழுமையான மற்றும் தகுதி உள்ள விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்பதால் விண்ணப்ப பாரங்களை பூர்த்தி செய்வதில் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றும்படி ஆலய நிர்வாகத்தினரை அவர் கேட்டுக் கொண்டார்.
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் மேம்பாட்டிற்காக 2025ஆம் ஆண்டு மாநில அரசின் வரவு செலவுத் திட்டத்தில் 60 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக பாப்பாராய்டு கடந்தாண்டு இறுதியில் அறிவித்திருந்தார்.
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு முதல் மாநில அரசு மானியம் வழங்கி வருகிறது.
வழிபாட்டுத் தலங்களை புனரமைப்பது, உடைக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களை இடமாற்றம் செய்வது, புதிதாக ஆலயங்களை நிர்மாணிப்பது, சமய வகுப்புகளை நடத்துவது மற்றும் உபகரணங்களை வாங்குவது ஆகிய நோக்கங்களுக்காக இந்த மானியம் வழங்கப்படுகிறது.


