ஷா ஆலம், ஜன. 4 - ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பினைப் பெற
உதவிய மாநில அரசின் ஜெலாஜா ஜோப்கேர் சிலாங்கூர் வேலை
வாய்ப்புச் சந்தை இவ்வாண்டும் மாநிலத்திலுள்ள ஒன்பது
மாவட்டங்களிலும் தொடரும்.
சேவை, உற்பத்தி உள்பட பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பினை
வழங்கும் முதலாளிகள் இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் பங்கு
பெறுவர் என்று மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான
ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
சுகாதாரம், சந்தை, சுற்றுலா, உபசரணை, போக்குவரத்து, உணவு மற்றும்
பானம் சம்பந்தப்பட்டத் துறைகளிலும் வேலை வாய்ப்புகளைப்
பெறுவதற்குரிய வாய்ப்பினை இந்த வேலை வாய்ப்புச் சந்தை
ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
மாநிலத்திலுள்ள ஒன்பது மாவட்டங்களிலும் இந்த வேலை வாய்ப்புச்
சந்தை இவ்வாண்டும் தொடரும். இதன் தொடர்பான விரிவான விபரங்கள்
பின்னர் வெளியிடப்படும் என அவர் மீடியா சிலாங்கூருக்கு அளித்த
பேட்டியில் குறிப்பிட்டார்.
பள்ளி படிப்பு முடிந்தவுடன் வேலை வாய்ப்பினை பெறுவது தொடர்பில்
விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இடைநிலைப்பள்ளிகளில்
விழிப்புணர்வு இயங்களை நடத்தவும் தாங்கள் திட்டமிட்டுள்ளதாக அவர்
சொன்னார்.
எதிர்காலத்தில் வாழ்க்கையில் மாற்று வருமானத்திற்கான
நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக திவேட் எனப்படும்
தொழில்நுட்ப மற்றும் தொழில்திறன் பயிற்சித் திட்டங்களில் பங்கு பெற
மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவர் என்றார் அவர்.


