ஷா ஆலம், ஜன. 4 - நேர்த்திக் கடனைச் செலுத்த சபரி மலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில்
(கே.எல்.ஐ.ஏ.) சிறப்பு வழித்தடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசு ஏற்படுத்தித் தந்துள்ள இந்த சிறப்பு வசதிகள் சபரி மலைக்குச் செல்லும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்களின் பயணத்தை எளிதாக்கியுள்ளதாக
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.
கிட்டத்தட்ட 48 நாட்கள் விரதமிருந்து சபரிமலைக்கு செல்லும் அவர்கள் விமான நிலையங்களில் நிர்வாக நடைமுறைகள் காரணமாக பல சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் போக்குவரத்து அமைச்சு, மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட், மலேசிய ஏர்லைன்ஸ், ஏர் ஆசியா, பாத்தேக் ஏர் நிறுவனப் பிரதிநிதிகளுடன் தாங்கள் சில தினங்களுக்கு முன்னர் பேச்சு நடத்தியதாக இந்திய சமூகத்திற்கான மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியுமான அவர் தெரிவித்தார்.
போக்குவரத்து அமைச்சின் அதிரடி நடவடிக்கையின் வாயிலாக முதல் ஐயப்ப பக்தர்கள் குழுவினர் நேற்று சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர்.
ஐயப்ப பக்தர்கள் விமான நிலையத்தில் காத்திருப்பதற்கான சிறப்பு இடம் வழங்கப்பட்டது.
அதே வேளையில் சோதனை இடங்களில் சிறப்பு வழித்தடமும் ஏற்பாடு செய்து தரப்பட்டது.
இதன் வாயிலாக அவர்கள் முழு வசதியுடன் சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர்.
இந்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சு, மலேசிய ஏர்லைன்ஸ், பாத்தேக் ஏர், ஏர் ஆசியா ஆகிய விமான நிறுவனங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐயப்ப பக்தர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி கொண்டு பக்தி நெறியுடன் தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்தி பாதுகாப்பாக நாடு திரும்ப வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.


