உலு சிலாங்கூர், ஜன. 4 - செரெண்டா, சுங்கை சோ, ஜாலான் அஸாலியா
1/1 சாலை சமிக்ஞை விளக்கில் மோட்டார் சைக்கிளோட்டியை காரில்
மோதி மரணத்தை ஏற்படுத்திய பாகிஸ்தானிய ஆடவர் விசாரணைக்காக
நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பான தொடர் விசாரணைக்காக புரோட்டோன் வீரா
காரின் ஓட்டுநரான 50 வயதுடைய அந்த ஆடவர் கைது
செய்யப்பட்டுள்ளதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர்
சூப்ரிண்டெண்டன் அகமது பைசா தாஹ்ரின் கூறினார்.
அந்த ஆடவருக்கு எதிரான கைது ஆணை நேற்று தொடங்கி நான்கு
நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று பெரித்தா ஹரியான் தொடர்பு
கொண்ட போது அவர் தெரிவித்தார்.
வாகனமோட்டும் லைசென்ஸ் வைத்திருக்கும் அந்த ஆடவர் பெரேடுவா
தொழிற்சாலையில் நண்பரைச் சந்தித்து விட்டு புக்கிட் ரவாங்கில் உள்ள
தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது
என்று அவர் சொன்னார்.
சமிக்ஞை விளக்கு பச்சை நிறத்திற்கு மாறியதைத் தொடர்ந்து தனது
பயணத்தை தொடர்ந்த 48 வயது மோட்டார் சைக்கிளோட்டியை அக்கார்
மோதித் தள்ளியது. இதன் காரணமாக அந்த ஆடவர் சாலையில்
விழுந்தார்.
அந்த காரோட்டியைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்த மற்றொரு
காரில் உள்ள கேமராவில் இந்த விபத்து தொடர்பான காட்சி
பதிவாகியுள்ளது.
மாலை 6.00 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் காயங்களுக்குள்ளான
அந்த ஆடவர் கோல குபு பாரு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். சிகிச்சை பலனளிக்காத நிலையில் அந்த ஆடவர் உயிரிழந்தார். எனினும், காரோட்டிக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட இரு வாகனங்களும் பறிமுதல்
செய்யப்பட்டுள்ள வேளையில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச்
சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் இவ்விபத்து தொடர்பில் விசாரணை
நடத்தப்பட்டு வருகிறது.


