முவான் (தென் கொரியா), ஜன. 4 - மொத்தம் 179 உயிர்களைப் பலி கொண்ட ஜெஜூ ஏர் விமான விபத்து தொடர்பாக தென் கொரிய போலீசார் முவான் அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று இரண்டாவது நாளாக சோதனை நடத்தினர் என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
விமான விபத்து தொடர்பான ஆவணங்களைப் பெறுவதற்காக தென் கொரியாவின் தென்மேற்கில் உள்ள அந்த விமான நிலைய அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஜியோனம் மாநில காவல்துறை தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.
கடந்த வியாழக்கிழமை சியோலில் உள்ள ஜெஜூ ஏர் அலுவலகத்தையும் பூசன் வான் போக்குவரத்து பிராந்திய அலுவலகத்தில் உள்ள முவான் அலுவலகத்தையும் சுமார் 30 புலனாய்வாளர்கள் முற்றுகையிட்டுச் சோதனை நடத்தினர்.
விமான நிலையத்தில் உள்ள இட நிலைப்பின் செல்லுபடித் தன்மை, ஓடுபாதைக்கு அருகே ஆண்டெனா வரிசையை உள்ளடக்கிய கான்கிரீட் சுவர் மற்றும் விபத்துக்கு சற்று முன்பு கட்டுப்பாட்டு கோபுரத்திற்கும் விமானிக்கும் இடையிலான தகவல்தொடர்பு பதிவுகள் தொடர்பான ஆதாரங்களை போலீசார் தேடுகின்றனர்.
விமானத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு தொடர்பான பதிவுகளுடன், ஓடுபாதைக்கு அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் பெற அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.
தொழில்முறை அலட்சியம் காரணமாக இந்த மரணப் பேரிடர் ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டின் பேரில் தேடுதல் ஆணை பிறப்பிக்கப்பட்டது.


