கோலாலம்பூர், ஜன. 4 - தலைநகரிலுள்ள கனிணி மைய வாகன
பரிசோதனை மையத்தில் (புஸ்பாகோம்) ஊழல் நிகழ்ந்ததாக சந்தேகிக்கப்படும்
தொடர்பில் ஆடவர் ஒருவரை ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கைது செய்துள்ளது.
ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் சாலை போக்குவரத்து இலாகா
(ஜே.பி.ஜே.) இடையிலான விவேக ஒத்துழைப்பின் வாயிலாக 40 வயது
மதிக்கத்தக்க அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சாலை போக்குவரத்து இலாகா அந்த ஆடவரை எம்.ஏ.சி.சி.யிடம்
ஒப்படைத்த து. புத்ராஜெயாவிலுள்ள எம்.ஏ.சி.சி. தலைமையகத்தில்
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டப் பின்னர் அவ்வாடவர் கைது
செய்யப்பட்டார்.
புஸ்பாகோமில் சோதனைக்கு உட்படுத்தப்படும் வாகனங்கள்
அச்சோதனையில் தேறி வருவதற்கு பிரதியுபகாரமாக ஒவ்வொரு
வாகனத்திற்கும் கணிசமான தொகையை அந்த ஆடவர் செலுத்தியதாக
நம்பப்படுகிறது.
இந்த வழக்கு 2009ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் 16(பி)(ஏ) பிரிவின் கீழ்
விசாரிக்கப்படுகிறது. அவ்வாடவரை விசாரணைக்காக தடுத்து
வைப்பதற்கான அனுமதி புத்ராஜெயா நீதின்றத்தில் இன்று காலை
பெறப்பட்டது.
வாகன பரிசோதனை முறையைப் பாதுகாப்பதற்கும் அந்த நடைமுறை
ஊழிலிருந்து விடுபட்டிருப்பதை உறுதி செய்வதற்கும் எம்.ஏ.சி.சி. மற்றும்
ஜே.பி.ஜே. கொண்டுள்ள கடப்பாட்டை பிரதிபலிக்கும் விதமாக இந்த கைது
நடவடிக்கை அமைந்துள்ளதாக அந்த ஊழல் தடுப்பு ஆணையம்
தெரிவித்தது.


