கோலாலம்பூர், ஜன. 4 - காஸாவில் பொதுக்களுக்கு எதிராக குறிப்பாக
பெண்கள், சிறார்கள் மற்றும் ஊடகவியலாளர்களைக் குறி வைத்து
இஸ்ரேலியப் படைகள் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்களை
மலேசியா வன்மையாகக் கண்டித்துள்ளது.
மருத்துவனைகளைக் குறி வைத்து இஸ்ரேல் வேண்டுமென்றே நடத்தி
வரும் கோரத் தாக்குதல்கள் குறிப்பாக கமால் அத்வான்
மருத்துவமனையில் நோயாளிகள், பணியாளர்கள் மனிதாபிமானமற்ற
முறையில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு கட்டிடம்
தரைமட்டமாக்கப்பட்டது, அனைத்துலகச் சட்டங்களை மீறும் விதமாகவும்
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை புறக்கணிக்கும் வகையிலும்
உள்ளது என்று வெளியறவு அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.
இடை விடாத வான் தாக்குதல், கட்டாய இட மாற்றம், குடியிருப்புகளை
குறி வைக்கும் திட்டமிட்ட இலக்கு, ஆகியவை இனப்படுகொலை மற்றும்
போர் குற்றங்களாக வகைப்படுத்தும் அப்பட்டமான ஆதாரங்களாகும் என
அது குறிப்பிட்டது.
போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தை தடுக்கும்
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாஹூவின் கபடத்தனம்
பாலஸ்தீன மக்களின் துயரத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளதோடு
நிரந்தரப் போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதற்கான அரசதந்திர
முயற்சிகளையும் தோல்வியுறச் செய்துள்ளது என்று விஸ்மா புத்ரா
தெரிவித்தது.
இந்த கொடூர மற்றும் மனிதாபிமானமற்ற செயல்களைத் தடுத்து நிறுத்தும்
பொறுப்பை அனைத்துலகச் சமூகம் கூட்டாக ஏற்க வேண்டும். எந்த
பாவமும் அறியாத அப்பாவிகளின் உயிர் காப்பாற்றப்படுவதை உறுதி
செய்யும் அதே வேளையில் இனப்படுகொலை மற்றும் போர் குற்றங்களுக்கு சம்பந்தப்பட்டவர்களைப் பொறுப்பேற்கவும் செய்ய வேண்டும் என அமைச்சின் அறிக்கை வலியுறுத்தியது.
அமைதி, நீதி, மதிப்புக்கான அனைத்துலகச் சட்டங்கள் நிலைநாட்டப்பட
வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டது.


